மதுரை: தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், 'தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட தாருகாபுரம் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தின்கீழ் பணிகள் நடந்து வருகின்றன.
இந்தப் பணிகளுக்கு பொறுப்பாளராக சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தாருகாபுரம் பஞ்சாயத்து உறுப்பினர் முருகலட்சுமி என்பவரும் பணியாற்றி வருகிறார். பொறுப்பாளர்கள் 3 மாதம் (90 நாட்கள்) மட்டுமே பொறுப்பில் பணி செய்ய வேண்டும். ஆனால், மேற்படி அவர் கடந்த 7 மாத காலங்களாக பணியில் இருந்து நீக்கப்படாமல் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்.
இதில் முருகலட்சுமி என்பவரின் தகப்பனார் ராமச்சந்திரன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். சுப்புலட்சுமி மற்றும் முருகலட்சுமி ஆகியோர் இணைந்து 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் வேலை செய்யும் பணியாளர்களைக் கொண்டு ராமச்சந்திரன் என்பவரின் விவசாய நிலத்தில் கரும்புகளுக்கு உரம் வைத்தல், தென்னை மரங்களைப் பராமரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகிறது. எனவே, அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய நபர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை முறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.