தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இவர்கள் சிங்கப் பெண்களல்ல... பருத்திப் பெண்கள்...! - நாப்கின் கழிவுகளுக்கு தீர்வு

ஆண்களை விட பெண்கள் எப்போதும் பலசாலிகள் தான். இருப்பினும் இவர்கள் சந்தித்து வரும் மாதவிடாயை, வார்த்தைகளால் விளக்க முடியாத வலிகளைக் கொண்டது. இந்த இயற்கை மாற்றத்தால் உடல் சோர்வை மட்டுமன்றி சாதாரண நாப்கின்கள் பயன்படுத்துவதால் கூடுதலாக சில உடல் உபாதைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. எல்லோரும் சிங்கப் பெண்கள் என்று கர்ஜித்து வரும் நிலையில், இந்தப் பிரச்னைக்கு மாற்று வழியை கண்டறிந்துள்ளனர் பருத்தி பெண்கள். இவர்கள் குறித்த சிறப்பு தொகுப்பு.

பருத்தி பெண்கள் குழுவின் மூலிகை நாப்கின் தயாரிப்பு குறித்த சிறப்பு தொகுப்பு
பருத்தி பெண்கள் குழுவின் மூலிகை நாப்கின் தயாரிப்பு குறித்த சிறப்பு தொகுப்பு

By

Published : Mar 17, 2020, 9:30 PM IST

மதுரை மாவட்டம், நாகனாகுளத்தைச் சேர்ந்தவர் கண்ணம்மாள். இவர், பருத்தி பெண்கள் குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி இயற்கையான முறையில் மூலிகை நாப்கின்களை தயாரித்து வருகின்றனர். இவர், மாதவிடாய்போது பெண்கள் பயன்படுத்தும் சாதராண நாப்கின்களால் அரிப்பு, எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் வருவதைத் தடுக்கவும், நாப்கின் கழிவுகளால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் திட்டமிட்டார்.

இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்த கண்ணம்மாள், தற்போது அதை மூலிகை நாப்கின் தயாரிப்பால் செயல்படுத்தி காட்டியுள்ளார். இவரின் இந்தப் பணிக்கு ராதா, சுமதி ஆகிய பெண்களும் துணை நிற்கின்றனர். இதற்காக, திருச்சியில் சிறப்புப் பயிற்சியை மேற்கொண்டுள்ள பருத்தி பெண்கள் குழுவினர், இந்தப் பயிற்சியை விருப்பமுள்ளவர்களுக்கு இலவசமாக கற்று கொடுப்பதிலும், ஆர்வமாக இருக்கின்றனர்.

மேலும் தேவையின் அடிப்படையில் நாப்கின்களை தயாரித்து வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விநியோகம் செய்கின்றனர். இது குறித்து தெரிவித்த கண்ணம்மாள், " வேம்பு, கற்றாழை, திரிபலா ஆகியவைகளை பொடியாக தயாரித்து, பருத்தியில் வைத்து நாப்கின்கள் தயாரிக்கிறோம். இதைப் பயன்படுத்தினால் அரிப்பு, நீர்க்கட்டி, ரத்தப்போக்கு போன்ற மாதவிடாய் சார்ந்த உடல் உபாதைகள் ஏற்படுவதில்லை" என்றார்.

பருத்தி பெண்கள் குழுவின் மூலிகை நாப்கின் தயாரிப்பு குறித்த சிறப்பு தொகுப்பு

இவர்களின் இந்த செயல் குறித்து தெரிவித்த களம் அமைப்பின் நிர்வாகி வரதராஜன், "பெண்களின் ஆரோக்கியம் சார்ந்தத் தொழிலை இவர்கள் மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு பெண்ணுக்கும் மட்டுமன்றி, மண்ணுக்கும் இவர்களின் பணி உன்னதமானது. இந்த மூலிகை நாப்கின், மண்ணில் விரைவில் மக்கி விடும்.

இது பெண்களுக்கான நல்ல குடிசைத் தொழிலாகவும் அமைந்துள்ளது. மூலிகை நாப்கின் தயாரிக்கும் இந்தப் பணியில் மேலும் பெண்கள் பலர் ஈடுபட முன்வர வேண்டும். அப்போதுதான் குறைந்த விலைக்குத் தரமான பொருளை அனைத்துப் பெண்களும் பயன்படுத்தும் நிலை உருவாகும்' என்றார்.

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்குப் பெரும் கேடு ஏற்படுகின்ற காரணத்தால், அதனை ஒழிப்பதற்குத் தேசிய அளவில் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுபோன்ற மூலிகை நாப்கின்கள் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு மட்டுமன்றி, பெண்களின் உடல் நலனுக்கும் உகந்ததாகத் திகழ்வது பாராட்டிற்குரியது.

இதையும் படிங்க : கானக உயிர்களைக் காண ஒரு பயணம்.... வன உயிர் புகைப்படக்காரர் செந்தில் குமரன் ஷேரிங்ஸ்

ABOUT THE AUTHOR

...view details