ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் திருமுருகன். இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் குறிபிட்டுள்ளதாவது, "சோழ சாம்ராஜ்ஜியத்தின் பேரரசன் முதலாம் ராச ராச சோழன் கிபி 985 முதல் கிபி 1014 வரையில் ஆட்சி புரிந்தார். இவரது இயற்பெயர் அருள்மொழிவர்மன். இவரது ஆட்சி காலத்தில் நுண்கலை, கட்டிடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்து துறைகளும் சிறந்து விளங்கின. இதற்கான சான்றுகளாக தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீரங்கம் கோயில் உள்ளிட்டவை உள்ளன.
இவருடைய ஆட்சியும், கட்டிடக்கலையும் இன்று அளவும் உலக அளவில் அனைவராலும் பாராட்டப்பட்டு புகழ்ந்து பேசபட்டு வருகிறது. ஆனால் இவருடைய சமாதி தற்போது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உடையாளூர் என்ற கிராமத்தில் கேட்பாரற்று பராமரிப்பு இன்றி சிதைந்து கிடக்கிறது. இந்த கிராமத்தை சுற்றி ஆரியப்படை, சோழப்படை, சோழமாளிகை, பட்டீஸ்வரம் போன்ற கிராமங்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் அரண்மனை மற்றும் மாளிகைகளும் உள்ளன. இதனை தொல்லியல் துறை முறையாக ஆய்வு செய்தால் சோழர்களின் வரலாற்று சான்றுகள் கிடைக்கும்.