மதுரை:சிவகாசி ஆணையூர் கிராமம் அண்ணாமலையார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் A.S. கருணாகரன். இவர், உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "சிவகாசி அண்ணாமலையார் காலனி பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. எங்களுக்கு உரிய நீர் ஆதாரத்திற்கு, எங்கள் தனிப்பட்ட நபர்களின் வீடுகளில் அமைக்கபட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம்.
சில நாள்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் சில நபர்கள் வந்து ஆணையூர் கிராமத்தில் பட்டா நிலத்தில் பல நாள்களாக பயன்பாட்டில் இல்லாமல் மூடப்பட்டு கிடந்த கிணற்றினை சரிசெய்து, அதில் வணிக நோக்கில் தண்ணீரினை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதற்கு அனுமதி பெறவில்லை.
ஆழ்துளைக் கிணற்றில் வித்திட்ட அளவிற்கு கூடுதலாக தண்ணீர் எடுக்கும் பட்சத்தில், எங்கள் வீடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து வீடுகளிலும் தண்ணீரின் அளவு இல்லாமல் போய்விடும். எனவே அனுமதி இல்லாமல், குடியிருப்பு பகுதியில் உள்ள கிணற்றில் வணிக நோக்கில் தண்ணீரை எடுத்து விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.