மதுரை:குழந்தை மாயம் தொடர்பான புகார்கள் வரும்போது, உடனடியாக பெற்றோரின் மரபணு (DNA) விபரங்களை டேட்டா வங்கியில் சேகரித்துப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடவும், இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக உயர்நீதிமன்ற பதிவுத்துறையில், உள்துறை செயலாளரும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபியும் 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த கணவன், மனைவி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விசாரணையைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத் தாக்கல் செய்த மனுவில், 'எங்களுக்குக் குழந்தை இல்லை. ஒரு குழந்தையைத் தத்தெடுக்க முடிவு செய்து அதற்காக 1.8.2022-ல் பதிவு செய்தோம். இந்நிலையில், திருமணமாகாத பெண் ஒருவருக்குப் பிறந்த ஆண் குழந்தை எங்களுக்குக் கிடைத்தது.
அந்த குழந்தைக்குப் பிறப்பு சான்றிதழ் பெற முயன்ற போது, சட்டப்படி தத்தெடுக்காமல் குழந்தையை வளர்த்து வருவதாக வி.கே.புரம் காவல்துறை எங்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், குழந்தையை மாவட்ட சமூகப்பணிகள் இயக்குநர் வசம் ஒப்படைத்தனர். அந்த குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க அனுமதி கோரி, 3.3.2023-ல் மனு அனுப்பினேன். அந்த மனு அடிப்படையில் குழந்தையை சட்டப்படி தத்தெடுக்க, அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்' என மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று (டிச.9) விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 'குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் படி, சிறார் நீதியாகக் குழந்தை தத்தெடுப்பு குறித்துக் கூறப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சட்டப்படியான குழந்தை தத்தெடுப்பு முறைகளைப் பின்பற்றவில்லை. இருப்பினும், அந்த குழந்தை 6 மாதமாக மனுதாரர்களின் பராமரிப்பிலிருந்துள்ளது. குழந்தை கடத்தப்பட்டிருந்தால் அந்த குழந்தையை மீட்டு உண்மையான பெற்றோரிடம் ஒப்படைப்பது தான் நியாயமானது.