தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேவேந்திர குல வேளாளர் ஆய்வுக்குழுவை ரத்து செய்யக்கோரிய வழக்கு: மனுதாரரும், மாநில அரசும் பதிலளிக்க உத்தரவு!

மதுரை: தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை தொடர்பான ஆய்வுக்கு குழு அமைத்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை மனுதாரர் தரப்பும், 1981ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பட்டியலை அரசு தரப்பும் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு: மனுதாரரும், மாநில அரசும் பதிலளிக்க உத்தரவு...!
தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கு: மனுதாரரும், மாநில அரசும் பதிலளிக்க உத்தரவு...!

By

Published : Oct 8, 2020, 8:39 AM IST

திருச்சி டி. வளவனூரைச் சேர்ந்த அமர்நாத், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இதுதொடர்பான மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,"நான் எஸ்.சி. பட்டியலில் இந்து பள்ளர் வகுப்பைச் சேர்ந்தவன். எஸ்.சி., பட்டியலில் உள்ள 76 சாதிகளில் பள்ளர் வகுப்பினர் தான் அதிகளவில் உள்ளனர். 1981 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பள்ளர்கள் 27.60 விழுக்காடு பேர் உள்ளனர். பறையர் வகுப்பினர் 22.96 விழுக்காடு பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் எஸ்.சி., பட்டியலில் உள்ள பள்ளர், குடும்பன், தேவேந்திரகுலத்தான், கடையன், பன்னாடி, காலாடி ஆகிய வகுப்புகளை எஸ்.சி. பட்டியலில் இருந்து நீக்கி, 6 வகுப்புகளையும் சேர்த்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்து தமிழ்நாடு அரசு 2019ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது. எஸ்.சி., பட்டியலில் ஒரு சாதியை சேர்க்கவோ, நீக்கவோ, பிரிக்கவோ நாடாளுமன்றத்துக்குத் தான் அதிகாரம் உண்டு. இது தொடர்பாக குடியரசுத் தலைவர் தான் அறிவிப்பாணை பிறப்பிக்க முடியும். எஸ்.சி., பட்டியலில் இருந்து ஆறு சாதியை நீக்குவது தொடர்பாக ஆய்வு செய்யக்குழு அமைக்க மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. எனவே, தேவேந்திர குல வேளாளர் கோரிக்கை தொடர்பான ஆய்வுக்கு குழு அமைத்து பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். அந்த அரசாணையை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், "குடியரசுத் தலைவர் அதிகாரத்தில் மாநில அரசு தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. எஸ்.சி., பட்டியல் திருத்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு, அதுவும் குடியரசுத் தலைவருக்குத் தான் அதிகாரம் உள்ளது" என்றார்.

அப்போது நீதிபதிகள், "இப்போது குழு மட்டும் தான் அமைத்துள்ளனர். குழுவின் கோரிக்கையை ஏற்காவிட்டால் மாநில அரசு எந்த முடிவும் எடுக்காது" என்றனர். இதையடுத்து வாதிட்ட கூடுதல் அட்வகேட் ஜெனரல், "குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை"என்றார்.

பின்னர், உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை மனுதாரர் தரப்பும், 1981ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பட்டியலை அரசு தரப்பும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 12ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க...சசிகலா, இளவரசன், சுதாகரன் சொத்துகள் முடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details