இது குறித்து திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மருதகுலம் பகுதியைச் சேர்ந்த நயினார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," நான் 100% பார்வை குறைபாடுள்ள மாற்று திறனாளி. கடந்த 2010ஆம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் பவுண்டேஷன் கோர்ஸில் சேர்ந்து படித்தேன். இந்த படிப்பு 10, 12ஆம் வகுப்புக்கு இணையானது என அரசு அறிவித்துள்ளது. அதைத்தொடர்ந்து பி. காம் முடித்தேன்.
குரூப் 4, 2 தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றேன். பணி நியமனத்திற்காக காத்திருக்கிறேன். இந்த நிலையில் இந்த ஆண்டு நடந்த குரூப் 1 தொடக்க நிலை தேர்வில் வெற்றி பெற்றேன். அடுத்தக் கட்டமாக முக்கிய தேர்வு வருகிற ஜூலை 12-14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்தத் தேர்விற்கான அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்ய முயன்றபோது, அனுமதிச் சீட்டை பெற இயலவில்லை. கடந்த 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைப்படி பல்கலைக்கழகத்தில் படித்த பவுண்டேஷன் கோர்ஸில் படித்த 10,12ஆம் வகுப்புக்கு இணை ஆகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நான் குரூப் 2, 4 தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளேன். தற்போது குரூப் 1 முக்கிய தேர்விற்கு தயாராகிக்கொண்டு இருக்கும் நிலையில், இந்த தகவல் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. எனவே நான் ஜூலை 12ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 1 தேர்வினை எழுத அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் மதுரைக் கிளையில் அரசுப்போட்டித் தேர்வு தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி முன்பாக வழக்கை பட்டியலிட உத்தரவிட்டார்.