மதுரை கோமதிபுரத்தில் உள்ள ஒரு பெரிய மளிகைக் கடையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கையில் கட்டைப் பையுடன் நுழைந்து செல்போன் பேசிக் கொண்டே, விலை ஏறிக் கொண்டே போகும் வெங்காயத்தைத் திருடியுள்ளார்.
பின்பு சுற்றும் முற்றும் யாரும் தன்னை பார்க்கீறார்களா? என நோட்டமிடும் அந்த நபர் கடையில் இருக்கும் நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளையும் தனது பையில் போட்டுக்கொள்கிறார். இதனையடுத்து கடையில் இருந்த பணியாட்களிடம் உங்களது முதலாளியிடம் ' அரிசி வாங்கப் பணம் கொடுத்துள்ளேன். இப்ப அரிசி வேண்டாம். நான் தந்த ஆயிரத்து 500 ரூபாய் பணத்தைத் திருப்பிக்கொடுங்கள்' என்று பெற்றுக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
சிறிது நேரம் கழித்து கடைக்கு வந்த முதலாளியிடம் ஆயிரத்து 500 ரூபாய் கொடுத்தது குறித்து பணியாட்கள், கூற முதலாளி அதிர்ச்சியடைந்துள்ளார். யார் அவர் என்ற சந்தேகத்தின் பேரில் கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைப் பார்த்த போது, மஞ்சள் சட்டை அணிந்த நபர் வெங்காயம் முதல் நொறுக்குத் தீனி வரை திருடும் காட்சிகள் பதிவாகியிருந்தன.