மதுரை:மதுரை மாவட்டம் மேலூர், மேலவளவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கிரானைட் குவாரிகள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த 2011ஆம் ஆண்டு கிரானைட் எடுப்பதில் விதிகளை மீறி அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது. அதனைத் தொடர்ந்து, பிஆர்பி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் மீது வழக்குகள் தொடரப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இதனையடுத்து கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கு 2012 முதல் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரானைட் குவாரிகள் நடத்துவதற்கான டெண்டர் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:முதலமைச்சரை அவதூறாகப் பேசிய அதிமுக மாஜி எம்எல்ஏ மீது வழக்கு.. மன்னிப்புக் கேட்டதால் ஜாமீன் வழங்கிய நீதிபதி!
இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டத்தில், சேக்கிபட்டி கிராமம் புல எண். 247 (பகுதி-1), 247 (பகுதி-2), அய்யாபட்டி கிராமம் புல எண்.498/1 (பகுதி) மற்றும் திருச்சுனை கிராமம் புல எண்.83 (பகுதி) ஆகிய அரசு புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள பல வண்ண கிரானைட் குவாரிகளை 20 ஆண்டுகளுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க டெண்டருடன் இணைந்த பொது ஏலத்திற்கான டெண்டர் விண்ணப்பங்கள் அக்டோபர் 30 மாலை 4 மணி வரை தமிழக அரசின் சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரால் வரவேற்கப்படுகிறது.
மேலும், அக்டோபர் 31 காலை 11 மணி முதல் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது ஏலம் நடத்தப்பட்டு, டெண்டர் விண்ணப்பங்களை பிரித்து பரிசீலனை செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாதிரி விண்ணப்பப் படிவம், டெண்டர் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் ஆகியவற்றின் விபரம் மதுரை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடு எண்.04, அக்டோபர் 3-இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி, பல வண்ண கிரானைட் குவாரி டெண்டருடன் இணைந்த பொது ஏலம் தொடர்பான விபரங்களுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கூடுதல் கட்டிடம், 3வது தளத்தில் இயங்கி வரும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஊருக்குள் உலா வந்த ஒற்றை காட்டு யானை..! ஆறு மணி நேரம் போராடி விரட்டிய வனத்துறையினர்..!