தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்ட முறைகேடு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு!

மதுரை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பணிகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Madras High Court Madurai Branch
Madras High Court Madurai Branch

By

Published : Sep 4, 2020, 6:30 PM IST

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை யூனியன், குகன் பாறையைச் சேர்ந்த தாமரைச்செல்வன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்துள்ளார்.

அதில், "எங்கள் ஊரான குகன் பாறையில் 424 குடியிருப்புகள் உள்ளன. இதில் ஏராளமானோர், ஏழை எளிய மக்கள் குடியிருந்துவருகின்றனர். எங்கள் ஊர் தலைவராக கே.வி.கே. ராஜு என்பவர் இருந்துவருகிறார்.

தற்போது, அவர் தலைமையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெற்றுவரும் வேலைகளுக்காக, வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுவருகிறது.

இதில் எங்கள் ஊரைச் சேராதவர்கள், இறந்துபோனவர்கள் எனப் பலருக்கும் அடையாள அட்டைகள் வழங்கி, அரசு வழங்கிவரும் நிதியில் முறைகேடுகள் செய்துவருகின்றனர்.

அதேபோல், பணிகளுக்குரிய வேலை விண்ணப்பம் வழங்கும் பணி, வேலை அடையாள அட்டை வழங்கும் பணிகளுக்குத் தகுதியில்லாதவர்களை நியமித்து, அதன்மூலம் முறைகேடுகள் நடைபெற்றுவருகின்றன.

இதுபோன்ற முறைகேடுகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் அரசின் பணத்தைச் சிலர் எடுத்துவருகின்றனர்.

எனவே இது குறித்து அலுவலர்களிடம், புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே இது குறித்து சிபிஐ போன்ற அமைப்புகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details