பனைமரம் கழுத்து முறிந்து சாகிறதென்றால் உன் நாடு பாலைவனமாகிறது - நம்மாழ்வார்.
பனைமரங்கள் பண்டைய காலம் தொட்டே தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்துள்ளது. நிலத்தடி நீரை சேமித்து வைப்பதில் பனைமரங்கள் சிறப்பான பண்பை பெற்றுள்ளது. பனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15ஆண்டுகளை எடுத்துக்கொள்கிறது. இளம் பனைகள் வடவி என்று அழைக்கப்படுகிறது.
எதை கேட்டாலும் கொடுக்கும் மரத்தை கல்பதரு என்பார்கள். பனை ஓலை, பனங்கற்கண்டு, பனம் நுங்கு, பனம் பழம், பனங்கருப்பட்டி, பனை வெல்லம், பனை ஓலை விசிறி என பல்வகைப் பொருள்களை தரும் பனைமரம் கல்பதரு தான் பனைமரம். சங்க இலக்கியங்களில் பனைமரத்தைப் பற்றி விரிவாக எழுதப்பட்டிருப்பது ஒருபுறமிக்க, அந்த இலக்கியங்களை காலம் கடந்து காப்பாற்றியதும் பனைமரம் தான்.
பனை மரங்களின் தாயகம் ஆப்பிரிக்க நிலப்பகுதி என்றாலும், அவை தமிழ்நாட்டில் வேரூன்றி மண்ணின் மரமாக மாறி பல இலட்சக்கணக்கான வருடங்களாகிவிட்டன. இந்தியாவிலுள்ள 8 கோடி பனை மரங்களில் சற்றேறக்குறைய 6 கோடி மரங்கள் தமிழ்நாட்டில் மட்டும் உள்ளது. இன்று அழிவின் விளிம்பில் உள்ள பனைமரத்தைப் பாதுகாக்க உயர்நீதிமன்றமே உத்தரவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் பனைமரங்களின் நிலை என்ன என்பது குறித்து கடந்த 20ஆண்டுகளாக பனைமரங்கள் சார்ந்தும், பனைமரத் தொழிலாளர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலாசார மரபில் பனைமரத்தின் மீதான நம்பிக்கை குறித்து ஆராய்ச்சி செய்து வரும் காட்சன் சாமுவேல் எடுத்துரைக்கிறார். இவர் பனைமரச்சோலை என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். தென் தமிழகத்தில் பனைமரம், குறிப்பிட்ட ஒரு சாதியினருக்கானது என்று இருந்து வந்த பொதுப்புத்தி இந்த நூலால் தகர்க்கப்பட்டது.
காட்சன் சாமுவேல் மும்பையில் வசித்து வருவதால், ஆராய்ச்சி தொடர்பான நீண்ட நெடுந்தூர பயணத்தை அவரால் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வந்த இவர், 35 நாள்கள் தமிழ்நாடு முழுவதும் தனது ஆராய்ச்சியை தொடங்கினார்.
இந்த முறை பனைமரங்கள் சார்ந்து இயங்குகின்ற கலைஞர்கள், பனைமரத்தை காக்க விரும்பும் ஆர்வலர்களையும், அறிஞர்களையும் சந்தித்து மேலும் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியுள்ளார்.