தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காந்தி அருங்காட்சியகம் சீரமைப்பு - காந்தியின் பேத்தி வரவேற்பு - Gandhi grand daughter welcome Renovation of Gandhi Museum

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் சீரமைப்பிற்கு காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா வரவேற்பு அளித்துள்ளார்.

காந்தி அருங்காட்சியகம் சீரமைப்பிற்கு வரவேற்பு
காந்தி அருங்காட்சியகம் சீரமைப்பிற்கு வரவேற்பு

By

Published : Sep 22, 2021, 7:43 PM IST

மதுரை: தேசப்பிதா மகாத்மா காந்தியின் அரையாடை புரட்சியின் நூற்றாண்டு விழாவில் அவரின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சார்யா கலந்து கொண்டார்.

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அண்ணல் காந்தியடிகள் அரையாடை தோற்றத்தை மதுரையில்தான் அடையாளமாக்கிக் கொண்டார். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியா விடுதலையடைந்தது. ஆனாலும் தான் மேற்கொண்ட அரையாடை தோற்றத்தைக் காந்தியடிகள் கடைசிவரை கைவிடவில்லை.

பெண்களைப் போற்ற வேண்டும்

விடுதலை பெற்ற இந்தியாவில் இன்றைக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் இருந்து கொண்டே இருக்கின்றன. அச்சமின்றி வெளியில் சென்று வருவது இயலாத காரியமாகத்தான் உள்ளது. இன்றைய இளைஞர்கள் பெண்களைப் போற்றும் வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இழிவான செயல்களில் ஒருபோதும் இறங்கக்கூடாது. பெண்மை என்பதே தாய்மைதான். அந்த எண்ணம் எல்லோருக்குள்ளும் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு காந்திய சிந்தனைகளைக் கொண்டு செல்வதற்கு பல்வேறு உதவிகளைச் செய்து வருகிறது. குறிப்பாக மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் சீரமைப்பிற்கு நிதியுதவி செய்துள்ளது. இதனை நான் வரவேற்கிறேன்.

காந்தி அருங்காட்சியகம் சீரமைப்பிற்கு வரவேற்பு

சமூக நீதி நாள்

தமிழ்நாடு அரசு பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக அறிவித்துள்ளது. சமூக நீதி என்பது அரசால் மட்டுமே செய்துவிடக்கூடிய பணி அல்ல. ஒவ்வொருவருக்குள்ளும் சமூக நீதி தத்துவம் பிறக்க வேண்டும்.

காந்தியடிகளை நாம் தேசப்பிதா என்று அழைத்தாலும், மறைமுகமாக அவரது மனைவி கஸ்தூரிபா தேசத்தின் தாயாகிறார். தாய்மைதான் இந்த உலகத்தை ஆள முடியும் என்பதைச் சொல்வதற்கே இதனைக் கூறுகிறேன். நமது நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமையாகப் பார்க்கக்கூடாது. நம் ஒவ்வொருவரின் கடமையாகப் பார்க்க வேண்டும். நமது எண்ணத்தையும் மனதையும் தூய்மையாக வைத்துக் கொண்டால் நல்லதொரு வாழ்க்கையை நாம் வாழ முடியும்.

கரோனா காலம்

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இன்றைக்கு காந்தியடிகளின் தத்துவமே மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது. எளிமையான, அன்பான வாழ்க்கை முறையின் மூலம் இதுபோன்ற பெருந்தொற்றுகளை நாம் வென்றுவிட முடியும்.

இந்திய நாட்டிற்காக எவ்வளவோ கொடுத்த மகாத்மா காந்தியடிகளின் நினைவையும், மீனாட்சியின் அருளாசியையும் நான் மதுரையிலிருந்து எடுத்துச் செல்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க:தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி முதல் டெல்லி பயணம்: அமித் ஷாவுடன் சந்திப்பு?

ABOUT THE AUTHOR

...view details