உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கு, பல தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில், தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (DST), அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி குழுவும் (SERB) இணைந்து, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் செய்பவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இதில், தேர்ந்தெடுக்கப்படும் ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுவருகிறது. அதன்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியர் டாக்டர் மயில்முருகன் தலைமையிலான ஆராய்ச்சியை, தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (DST), அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி குழு (SERB) அங்கீகரித்து, முதல் தவணையாக 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.
இந்தத் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் வேதியியல் துறை பேராசிரியர் டாக்டர் மயில் முருகன், உயிரி தொழில்நுட்பவியல் துறை பேராசிரியர் டாக்டர் கோபால், தேனி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் அமுதன் ஆகியோர் ஈடுபடவுள்ளனர். இந்த ஆராய்ச்சிக்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிரத்யேகமாக ஆய்வுக்கூடம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.