மதுரை: உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து 55 பேர் கொண்ட குழுவினர் தென்னிந்தியாவில் உள்ள முக்கிய ஆலயங்களில் சுவாமி தரிசனம் செய்வதற்காக 17ஆம் தேதி யாத்திரைப் பயணிகள் ரயில் மூலமாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று(25.08.2023) நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு இன்று(26.08.2023) அதிகாலை மதுரை வந்தடைந்தனர்.
இவர்கள் பயணம் செய்த ரயில் பெட்டி மதுரை சந்திப்பிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மதுரை - போடி ரயில் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதிகாலை சுமார் 5.15 மணியளவில் ரயில் பெட்டியிலிருந்த நபர்கள் சமையல் செய்வதற்காக சிலிண்டரை பயன்படுத்தியபோது தீடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயில் பெட்டியில் பயணம் செய்தவர்கள் பாதுகாப்புக்காக உள்பக்கமாக அடைத்து வைத்திருந்ததால் உடனடியாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீ மளமளவெனப் பரவி பெட்டி முழுவதும் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பின்னர் அலறியபடி பலர் வெளியேறினர். சம்பவம் குறித்து அறிந்து மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலீசார், ரயில்வே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 1 மணிநேர போராட்டத்திற்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள் ரயில் பெட்டியிலிருந்து கருகிய நிலையிலிருந்த உடல்களை மீட்டு ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.