மதுரை: காளவாசல் அருகேவுள்ள தனது சட்டப்பேரவை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (மே12) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று மதுரை மாநகராட்சி மாமன்ற அவையில் நடைபெற்ற சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது.
பத்திரிகையாளர்களை தாக்கும் அளவிற்கு தொண்டர்களுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்றால் மிகுந்த வருத்தத்திற்குரியது. மதுரையில் உள்ள அதிமுக மாமன்ற உறுப்பினர்களுக்கு மாமன்ற அவையில் முறையான இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையரிடம் பலமுறை நான் புகார் அளித்துள்ளேன். மாநகராட்சி மேயர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்நிலையில் அது குறித்த செய்தியை சேகரிப்பது பத்திரிகையாளர்களின் பணி.
அதனைச் செய்ய விடாமல் தாக்குவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவம் நடந்தால் அதிமுக சார்பாக தலைமை கழக உத்தரவின்பேரில் மதுரை மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாமன்ற நிர்வாக நடவடிக்கைகளில் குடும்பத்தார் தலையிடுவது கண்டிக்கத்தக்கது.
இது போன்ற நிலை காரணமாகத்தான் தினகரன் பத்திரிக்கை அலுவலகம் எரிக்கப்பட்டு மூன்று பேர் உயிரிழந்தனர். திமுகவின் அடிப்படை குணம் மாறாது என்பது இந்த சம்பவத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிதி அமைச்சர் மக்களின் நிலையை அறியாதவராக இருக்கிறார்.