மதுரை: அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோயிலில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கினார்.
அப்போது ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது, "உலகளவில் தடுப்பூசிக்கு டெண்டர் விட்டு இதன் மூலம் கோடிக்கணக்கில் தடுப்பூசி பெறுவோம் என்று கூறினார்கள். ஆனால் மக்களுக்கு ஏமாற்றத்தை தந்தனர். அதேபோல் நீட் தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்று கூறினார்கள். அதிலும் தமிழ்நாடு மக்களுக்கு ஏமாற்றத்தையை தந்துள்ளனர்.
நாடாளுமன்றம் முடக்கம்
காவிரி பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 நாட்கள் முடக்கினர். இதைத்தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி காவிரி ஆணையத்தை பெற்றுத்தந்தோம். தோழமைக் கூட்டணியாக பாஜக இருந்தாலும் தமிழ்நாட்டின் உரிமைகளை என்றைக்கும் விட்டுக்கொடுத்ததில்லை.
பெட்ரோல், டீசல் மற்ற மாநில வரி வசூல்
ஒவ்வொரு மாநிலத்திலும் அரசு ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் வரியை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பிகாரை எடுத்துக்கொண்டால் ஒரு லிட்டருக்கு பெட்ரோலுக்கு 24.71 விழுக்காடும், டீசலுக்கு 18.34 விழுக்காடும், டெல்லியில் பெட்ரோலுக்கு 27 விழுக்காடும், டீசலுக்கு 17.24 விழுக்காடும், கோவாவில் பெட்ரோலுக்கு 16.66 விழுக்காடும், டீசலுக்கு 18.88 விழுக்காடும், குஜராத்தில் 25.45 விழுக்காடும், டீசலுக்கு 25.55 விழுக்காடும், மேற்கு வங்க மாநிலத்தில் பெட்ரோலுக்கு 25.25 விழுக்காடும் டீசலுக்கு 17.54 விழுக்காடும், உத்தரப்பிரதேசத்தில் பெட்ரோலுக்கு 26.90 விழுக்காடும், டீசலுக்கு 16.84 விழுக்காடும், உத்தரகாண்டில் பெட்ரோலுக்கு 27.15 விழுக்காடும், டீசலுக்கு 16.82 விழுக்காடும் வரி விதிக்கப்படுகிறது.
ஆனால், தமிழ்நாட்டில் பெட்ரோலுக்கு 32.16 விழுக்காடும், டீசலுக்கு 24.08 விழுக்காடும் விதிக்கப்படுகிறது. இதன் மூலம் பெட்ரோலுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.27.75, டீசலுக்கு ரூ.20.35, அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.