மதுரை : கடந்த 2018ஆம் ஆண்டு மருத்துவர் சுரேஷ்பாபு வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அதே ஆண்டில் தான் அமலாக்கத்துறை அதிகாரியாக மத்திய பிரதேசத்தில் அங்கித் திவாரி பணியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 2023ஆம் ஆண்டு மதுரைக்கு அங்கித் திவாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மருத்துவர் சுரேஷ் பாபுவின் வழக்கு அமலாக்கத்துறை வசம் ஒப்படைக்கப்படுவதாக கூறிய அங்கித் திவாரி, வழக்கில் இருந்து அவரை காப்பாற்றுவதாக கூறி மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு மருத்துவர் சுரேஷ் ஒப்புக்கொள்ளாததால், கடைசியில் ரூ.51 லட்சம் என பேரம் பேசி முடிக்கப்பட்டதாகவும், அதில் முதல் கட்டமாக கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி 20 லட்ச ரூபாயை திண்டுக்கலில் இருந்து நத்தம் செல்லும் சாலையில், காரில் வைத்து மருத்துவர் சுரேஷ் பாபு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், மீதித் தொகையை நேற்று (நவ. 30) அங்கித் திவாரி மருத்துவரிடம் வாட்ஸ் அப் கால் மூலம் கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இதுகுறித்து நேற்று (நவ. 30) திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சுரேஷ் பாபு புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரினைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த ஆலோசனைப்படி இன்று (டிச. 1) திண்டுக்கல்லில் உள்ள மதுரை புறவழிச் சாலையில், அதிகாரியின் காரில் 20 லட்சம் ரூபாயை மருத்துவர் வைத்துள்ளார்.
அப்போது அங்கித் திவாரி அந்த காரை எடுத்து செல்ல முயன்றபோது, அவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுற்றி வளைத்தனர். ஆனால் எப்படியோ அவர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் சாலையில், கொடைரோட்டில் உள்ள டோல்கேட்டிற்கு தகவல் தெரிவித்து அந்த காரை மடக்கி பிடித்து அவரைக் கைது செய்தனர்.