மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களை சார்ந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "பொதுவாக நிதி மேலாண்மையும், ஆளுமையும் நல்லாட்சியும் ஒன்றாக செயல்பட வேண்டும். நிதியை தேவையான அளவில் ஈட்டுவது அதனை முறையாக ஈட்டுவது யாரிடமும் இருந்து எவ்வளவு நிதி ஈட்ட வேண்டும்.
இதனை சரியாக செயல்படுத்துவதுதான் அரசாங்கத்திற்கு அழகு. துறை அமைச்சர் தெரிவித்தபடி அடிப்படை பொருளாதாரம் படித்தால் மூலதன செலவை எந்தெந்த மாநிலம் அதிகமாக்குகிறதோ, அந்தந்த மாநிலங்களில் வளர்ச்சி இருக்கும்.
70,000 முதல் 80 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்
2014ஆம் ஆண்டுக்கு முன் தமிழ்நாடு அரசின் வருமானம், உற்பத்தியில் 10 விழுக்காடாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக குறைந்து 6.5 சதவீதமாக இருக்கிறது.
கருணாநிதி ஆட்சிக்காலத்தில் 11.5 சதவீதமாக இருந்த வருமானம் தற்போதைய காலகட்டத்தில் 7.5 சதவீதமாக குறைந்துவிட்டது. கரோனா காலத்தில் 6.5 சதவீதமாக குறைந்துவிட்டது. சுமார் 70,000 முதல் 80 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வர வேண்டி உள்ளது. இது குறித்து விரிவாக வெள்ளை அறிக்கையில் வெளியிடப்படும்.
எந்தெந்த துறைகளில் இருந்து எவ்வளவு தரவேண்டும் என்பது அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படுவது அல்ல. நிதி ஆதாரங்களை திருத்துவதன் மூலம் பல்வேறு திட்டப் பணிகளை நிறைவேற்ற முடியும்.