சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல் துறையினர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்த நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளராக இருந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதில், காவலர் முருகன் ஜாமீன் வழங்கக் கோரி மூன்றாவது முறையாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல் துறையினர் வழக்கை விசாரித்த நிலையில், தற்போது சிபிஐ காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர் எனக் குறிப்பிட்டிருந்தார்.