மதுரை:மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. மேலூர் மற்றும் திருமங்கலம் ஒருபோக விவசாயத்திற்கு வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
பிரச்சனை நீதிமன்றத்தில் இருப்பதால் அதன் தீர்ப்பு வருகின்ற செவ்வாய்க்கிழமை வெளியான பிறகு உரிய முடிவெடுக்கப்படும் என ஆட்சியர் சங்கீதா கூறியதை ஏற்றுக்கொள்ள மறுத்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறிய விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி முழக்கம் எழுப்பினர்.
அப்போது செய்தியாளரிடம் பேசிய விவசாயிகள் ராமர் மற்றும் பழனிச்சாமி ஆகியோர், "மேலூர் மற்றும் திருமங்கலம் ஒருபோக பாசனப்பகுதிகளைப் புறக்கணித்து கள்ளந்திரி பகுதியில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு மட்டும் கடந்த 40 நாட்களாகப் பெரியாறு - வைகை பாசனத்தின் மூலம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
ஆனால் வைகையில் மூன்று முறை அணை நிறைந்து பெருக்கெடுத்து ஓடியும் கூட கடந்த இரண்டு மாதங்களாக எங்களுக்குத் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. மதுரை மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித்துறையும் திருமங்கலம், மேலூர் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கிறது.