ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த கலந்தர் ஆஷிக் அஹமத் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "தொண்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் தயார் அழகம்மாள் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று அதே பகுதியில் உள்ள தனியார் கிளினிக் சிகிச்சைக்காக சென்றுள்ளர். அங்கு மருத்துவர் ராஜலட்சுமி என்பவர் அவரை பரிசோதித்து மருந்துகள் வழங்கியுள்ளார்.
அதைத் தொடர்ந்து பிப்ரவரி 15ஆம் தேதி அழகம்மாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் சந்தேகமடைந்த முருகேசன், காவல் நிலையத்தில் புகாரளித்தார். காவல்துறையினர் விசாரணையில், பிப்ரவரி 23ஆம் தேதி ராஜலட்சுமி, மருத்துவம் படிக்காமல், சிறப்பு மருத்துவர் என்ற பெயரில், போலியாக, மருத்துவமனை நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், பத்தாம் வகுப்பு மட்டுமே படித்த அவர், பியூட்டிசியன் கோர்ஸ் முடித்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து மார்ச் 5ஆம் தேதியன்று தொண்டி காவல் நிலையத்தில் ஐந்து பேர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யபட்டது. இதில் மருத்துவர் ராஜலட்சுமி என்பவருக்கு உதவி செய்ததாகக் கூறி என் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முன்விரோதம் காரணமாக காவல்துறையினர் என்னை இந்த வழக்கில் சேர்த்து பதிவு செய்துள்ளனர். எனக்கும் போலி மருத்துவர் ராஜலட்சுமி என்பவருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே, என் மீது தொண்டி காவல் நிலையத்தில் பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி பொங்கியப்பன் முன் இன்று (ஆகஸ்ட்13) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நிதிபதி வழக்கு தொடர்பாக மனுதாரர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். மேலும், தொண்டி காவல் நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தவிட்டு வழக்கை செப்டம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:டெண்டருக்கு இடைக்கால தடை வழக்கு - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைப்பு