மதுரை கோச்சடை அருகே ரெடிமேட் ஜவுளி கடை நடத்திவருபவர் சதீஷ்குமார். இவர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக துணியால் தைக்கப்பட்ட முகக்கவசங்கள் வழங்கிவருகிறார்.
இது குறித்து ஈடிவி பாரத் செய்தியாளரிடம் அவர் பேசுகையில், “இந்த ஜவுளிக்கடையை எனது மனைவி சங்கீதா நடத்திவருகிறார். அவர் அளித்த ஊக்கத்தின் பேரில்தான் என்னுடைய பணியாளர்களின் துணை கொண்டு கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்கள் தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறோம்.
முகக்கவசங்கள் தயாரிக்கும் ஊழியர்கள் இந்தச் சேவையின் காரணமாக தற்போது காவல் துறையினரும், அரசுப் பணியாளர்கள், மாநகராட்சி பணியாளர்களும் எங்களிடம் கேட்டுப்பெற்று செல்கிறார்கள். நாளொன்றுக்கு 900 முகக்கவசங்கள் வீதம் தற்போதுவரை ஐந்தாயிரத்திற்கும் மேல் தயாரித்து அனுப்பிவருகிறோம்.
மதுரை மட்டுமன்றி சிவகங்கை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து முகக்கவசங்கள் வாங்கிச் சென்றுள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முகக்கவசங்கள் கேட்டு எங்களை அணுகுகின்றனர். சேவை நோக்கில் நாங்கள் இந்தப் பணியைச் செய்து வருகிறோம்.
சில இடங்களில் உரிய கட்டணம் தருவதாகக்கூட எங்களை அணுகியுள்ளனர். ஆனால், இயன்றவரை தயாரித்து இலவசமாக அனுப்பிவருகிறோம். தற்போது தேவை அதிகரித்துள்ளதால் எங்கள் சேவையை மேலும் சில நாள்களுக்கு அதிகரித்துள்ளோம். பல்வேறு துறை சார்ந்தவர்கள் எங்களதின் இந்த முயற்சிக்கு ஆதரவளித்தும், பாராட்டியும் வருகின்றனர்.
இலவச முகக்கவசங்கள் வழங்கும் சதீஷ்குமார் முகக்கவசங்கள் தயாரிப்பதற்குத் தேவைப்படுகிற நூல் சேலைகள், நூல் வேட்டிகள் ஆகியவற்றை பொதுமக்கள் எங்களுக்கு கொடுத்து உதவினால் இன்னும் நிறைய முகக்கவசங்கள் தயாரித்து இலவசமாக வழங்க முடியும். தற்போது எனது நண்பர்களின் உதவியோடு அதற்குரிய மூலப்பொருள்களை வாங்கி தயாரித்து வருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க: 'கரோனாவுக்கு கோவிந்தா தான்!' - ஸ்ரீரங்கத்தில் சிறப்பு யாகம்