சென்னை:இந்த ஆண்டு 2024-ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்காக அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டமானது பெங்களூரு, பாட்னா, டெல்லி என பல்வேறு இடங்களில் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது, பாஜக தலைமையிலான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றும் அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இந்திய (I.N.D.I.A) கூட்டணி என்றும் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து இந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினருடன் தலைமைத் தேர்தல் ஆணையம் நாளை (ஜன.08) சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், இதற்காக இந்தியத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னை வருகை தர உள்ளதாகவும் கூறப்பட்டது.
இதுமட்டும் அல்லாது, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும், இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி மையங்கள், தேர்தல் பணியாளர்கள், தேர்தல் பாதுகாப்புகள் தொடர்பாக இறுதிக்கட்ட ஆலோசனைகள் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலை தமிழ்நாட்டில் எந்த மாதம் மற்றும் எந்த தேதியில் நடத்தலாம் என்பது குறித்தும் ஆலோசனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையில் நாளை (ஜனவரி 08) நடைபெறவிருந்த இந்தியத் தேர்தல் ஆணையர் ஆலோசனைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், ஆலோசனைக் கூட்டத்திற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஜியோ நிறுவனம் ரூ.35 ஆயிரம் கோடி முதலீடு - மன்னிப்பு கேட்ட முகேஷ் அம்பானி!