மதுரை: தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குக் குழுவாகச் சென்று பார்வையிட்டு அதன் வரலாற்றுத் தொன்மையை அறிந்து கொள்வது தற்போது அதிகரித்து வருகிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் 'ஹெரிடேஜ்' குழுக்களும் உள்ளன. மதுரையிலும் சில அமைப்புகள் மரபு நடை, பசுமை நடை என்ற பெயரில் மாதம் ஒரு முறை பொதுமக்களை அழைத்துச் சென்று பண்டைய வரலாற்றை அறியச் செய்யும் குழுக்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவை என்ற அமைப்பு, மதுரையின் பல்லுயிர்ச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்குப் பொதுமக்கள், மாணவர்கள், துறை சார் வல்லுநர்களை ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்று, அங்குள்ள ஆறுகள், ஓடைகள், பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள், தாவரங்கள், கோவில்கள் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பல்லுயிர்ச்சூழலின் அவசியம் குறித்தும் விளக்கி வருகிறது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னால் துவங்கப்பட்ட இந்த நடையின் மூலமாக மதுரை மாவட்டம் நெடுங்குளம், கருங்காலிக்குடி; மஞ்சமலை, மறவபட்டி, அழகர்மலை, திருவாதவூர், வெள்ளிமலை கோவில் காடு, நாகமலை, புல்லூத்து என சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த மேற்கண்ட இடங்களுக்குப் பொதுமக்களைப் பயணமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து சிவில் சர்வீஸ் பயிலும் மாணவி பிரியதர்ஷினி, 8-ஆம் வகுப்பு மாணவி வர்ஷினி, இல்லத்தரசி மனோன்மணி ஆகியோர் கூறுகையில், “மதுரையிலிருந்து வெறும் 20 கி.மீ. தொலைவிலேயே இதுபோன்ற இடங்கள் உள்ளன என்பதை அறியும்போது மிக வியப்பாகத்தான் உள்ளது. மதுரையிலிருந்தாலும் இந்த இடங்களை அறியாமல் இருந்துவிட்டோமே என்ற வேதனைதான் ஏற்படுகிறது.
இன்றைக்கு நாகமலை புல்லூத்து பகுதியை வந்து பார்வையிட்டபோது, கிருதுமால் ஆறு உருவான இடம் என்பதை அறிந்து மிக மகிழ்ச்சியடைந்தோம். இங்கு அரிய வகை பாம்புகள், பல்லிகள், பட்டாம்பூச்சிகள், விலங்குகள் உள்ளன. அதேபோன்று இதுவரை நாம் பார்த்திராத பல வகை மரங்கள், தாவரங்கள், செடி, கொடிகளைப் பார்க்கும்போது இனம் புரியாத சந்தோஷத்தை உணர முடிகிறது.
இப்பயணத்திற்கு வந்திருந்த குழந்தைகள் மரத்தின் மீது ஏறி விளையாடுவதைப் பார்க்கும்போது நாமே விளையாடுவது போன்ற உணர்வு. எங்களைப் பொறுத்தவரைப் பல்லுயிர்கள் வாழக்கூடிய இந்த இடங்கள் அனைத்தையும் நமது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்பதுதான் ஆசை.
மதுரையைப் பூர்வீகமாகக் கொண்டு வாழும் பலருக்கும் இப்படியொடு இடம் மதுரையில் இருக்கிறதா என்பதுகூடத் தெரியாது. மேலும் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் நேரடியாகப் பாடம் எடுக்கின்றனர். பாடப்புத்தகங்களில் உள்ளதை நேரில் கண்டு உணர அரிய வாய்ப்பு இது” என்றனர்.
பறவையியலாளரும், அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவருமான பத்ரிநாராயணன் கூறுகையில், “கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பறவைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளாகப் பறவைகளுக்கும் செடிகளுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து ஆய்வு செய்கிறேன். அரிய வகை மரங்கள், செடி-கொடிகளின் விதைகளைக் கண்டறிந்து, அவற்றைப் பள்ளி, கல்லூரிகளில் நட்டும் வருகிறேன்.
செடிகளை நம்பியே பறவைகளும், மனிதர்களும் உள்ளன. ஆகையால் அவற்றின் இருப்பு என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மதுரையின் இன்னொரு பெயர் கடம்பவனம். ஆனால், கடம்ப மரம் அருகிப் போய்விட்டது. புல்லூத்தில் நடைபெற்ற இயற்கை நடையின் வாயிலாக, பல்லுயிர்ச்சூழல் குறித்த புரிதலை ஏற்படுத்தியுள்ளோம்.
செல்பேசியையும், தொலைக்காட்சியையும் மட்டுமே பொழுதுபோக்காகக் கருதுகிற இன்றைய சூழலில் இதுபோன்ற இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கவும் இளந்தலைமுறையினரைப் பயிற்றுவிக்க வேண்டும். தாவரங்களுக்கும், பூச்சியினங்களுக்கும் உள்ள தொடர்பை விளக்கும்போது அவர்கள் இயற்கையை நேசிக்கக் கற்றுக்கொண்டு விடுவார்கள்.
ஒவ்வொரு நடையிலும் 80 பேர் வரை பங்கேற்கின்றனர். இந்தப் பகுதியில் மட்டும் 20 வகையான பறவைகள் கணக்கெடுக்கப்பட்டு உள்ளன. பல வித்தியாசமான பறவைகளும் இங்கே வாழ்கின்றன. உயிரினச் சங்கிலி எவ்வாறு உருவாகிறது? பிற உயிரினங்கள் மற்ற உயிரினங்களோடு எவ்வாறு ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன என்பதை நேரில் காண்பதன் மூலமே முழுவதுமாக உணர முடியும். அதற்கு இதுபோன்ற நடை பெரிதும் உதவியாக உள்ளது” என்றார்.