திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராஜதுரை (30 வயது). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியான சித்ராவுக்கு 10 வயதில் ஒரு ஆண் குழந்தையுள்ளது. இரண்டாவது மனைவி பேச்சியம்மாளுக்கு எட்டு மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அனைவரும் திருப்பூரில் உள்ள ஆலை ஒன்றில் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.
குடிக்கு அடிமையான ராஜதுரை, அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவரது இரண்டாவது மனைவி 8 மாத குழந்தையை அவரிடம் ஒப்படைத்து விட்டு நெல்லைக்கு சென்றுவிட்டார்.
குழந்தையை பராமரிக்க முடியாமல் அவர் இரவு திருப்பூரில் இருந்து நெல்லைக்கு பேருந்தில் சென்றுள்ளார். அதிக குடிபோதையில் இருந்ததால் அவரை பேருந்தில் இருந்து நடத்துனர் திருமங்கலத்தில் இறக்கிவிட்டுவிட்டார்.
திருமங்கலத்தில் 8 மாத குழந்தையை விற்க முயன்ற குடிபோதை ஆசாமி! தொடர்ந்து எட்டு மாத குழந்தை அழுதுகொண்டே இருந்தது. இதனால் அந்த குழந்தையை கூவி கூவி விற்பனை செய்துள்ளார். இது குறித்து, சமூக ஆர்வலர் ஒருவர், குழந்தைகளுக்கான அவசர உதவி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார். இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நலக் குழும உறுப்பினர் ஒருவர் 'தங்களுக்கு குழந்தை வேண்டும்' என கேட்பது போல் பேச்சு கொடுக்க அதற்குள் அனைத்து மகளிர் காவல் நிலைய உயர் அலுவலர், ராஜதுரையிடம் இருந்த குழந்தையை மீட்டு, திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் நெல்லையில் இருந்து இரண்டாவது மனைவி பேச்சியம்மாள் வரவழைக்கப்பட்டு அந்த குழந்தையை ஒப்படைத்தனர். இதுகுறித்து ராஜதுரையிடம் திருமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி பின் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
இதையும் படிங்க : காவல் நிலையம் அருகே கொலை - ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு