வீட்டிற்குள் நுழைந்த வீரிய விஷமுள்ள கண்ணாடிவிரியன் பாம்பிடமிருந்து எஜமானரின் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சண்டையிட்டுக் கொன்ற 'தாரா', பாம்புக்கடியின் காரணமாக சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தது.
மதுரை கூடல்நகர் பகுதியிலுள்ள ஒரு குடும்பத்தினர் சுமார் ஒன்றரை வயதான புல்லி குட்டான் வகையைச் சேர்ந்த தாரா என்ற பெண் நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். குடும்பத்தாரோடு தாரா பாசத்துடன் வளர்ந்து வந்தது. நேற்று அதிகாலை வீட்டின் முன்புறமாக தாரா மிக சத்தமாகக் குரைத்துக்கொண்டு பரபரப்பாய் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது சத்தம் கேட்ட குடும்பத்தினர் சென்று பார்த்தபோது கார் ஷெட்டுக்குள் தாரா குரைத்துக் கொண்டே ஓடியது.
அங்கு சென்று பார்த்தபோது கண்ணாடிவிரியன் பாம்புடன் தாரா சண்டையிட்டுக் கொண்டிருந்தது. குடும்பத்தாரை பாம்பின் அருகே செல்லவிடாமல் தாரா தனியாக பாம்பிடம் போராடியது. போராட்டத்தில் பாம்பை தாரா கடித்துக் கொன்றது. ஆனால் சண்டையின்போது நாயின் தலைப்பகுதியில் பாம்பு கடித்திருந்ததால் விஷம் ஏறத் தொடங்கியது, இதனால் தாரா சுயநினைவை இழந்தது.
இதன் பிறகு வீட்டின் அருகிலுள்ள கால்நடை மருத்துவரிடம் தாரா கொண்டு செல்லப்பட்டது. நேற்று தாராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தாரா கோமா நிலைக்குச் சென்றது. நேற்று முழுவதும் சிகிச்சை நடைபெற்ற நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் தாரா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. அந்நாயை பாசத்துடன் வளர்த்த குடும்பத்தாருக்கு தாரா இறந்த சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க... நீ வாக்கிங் போகணுமா... ஜாலியா போயிட்டு வா: ட்ரோன் விட்ட நபர்