தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சங்கு சமுத்திர கண்மாயில் மணல் அள்ள தடை: சிவகங்கை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு!

மதுரை: சிவகங்கை அருகே சங்கு சமுத்திர கண்மாயில் மணல் அள்ள தடை விதிக்க கோரிய வழக்கில், அம்மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Do not take sand at sangu samuthira tank
Do not take sand at sangu samuthira tank

By

Published : Dec 6, 2019, 5:28 PM IST

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த ஜான் போஸ்கோ விவேகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், "சிவகங்கை மாவட்டம் சங்கராபுரம் ஊராட்சிக்குள்பட்ட சங்கு சமுத்திர கண்மாய் 140 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மணல் அள்ளப்பட்டுவருகிறது. இதனால் அரசுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

அதோடு மட்டுமல்லாமல் கண்மாயின் கரைகளை உடைத்து சுமார் 20 அடி அளவுக்கு குழி தோண்டி, வளமான கிராவல் மண்ணை எடுத்து விற்பனையும் செய்கின்றனர். கண்மாயின் கரைகள் உடைக்கப்பட்டுள்ளதால், கண்மாயில் தேங்கும் தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்துவிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கண்மாய் அருகிலேயே ஓர் தனியார் பள்ளிக்கூடம் செயல்பட்டுவரும் சூழ்நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் அடிக்கடி வந்துசெல்வதால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதோடு, பள்ளிக் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எவ்விதமான முறையான அனுமதியின்றி கண்மாயைச் சேதப்படுத்தி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திவருகின்றனர்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, சிவகங்கையில் சவடு மண் குவாரி செயல்பட இடைக்கால தடைவிதிக்கவும் சங்கு சமுத்திரம் கண்மாயில் குவாரியினால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்டறிய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்புக்குள்பட்ட 13 மாவட்டங்களில் சவடுமண் குவாரிகள் செயல்பட தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி சிவகங்கை மாவட்ட கண்மாய்களில் இதுபோல குவாரிகள் செயல்பட்டுவருகிறது” எனத் தெரிவித்தார்.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சங்கு சமுத்திர கண்மாயில் மணல் அள்ள இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர், மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 6ஆம் தேதிக்கு அவர்கள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ‘வெங்காய விலை குறித்த கவலை பாஜகவுக்கு உள்ளது’ - பொன். ராதாகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details