மதுரை ஆதீன மடத்தில் மதுரை ஆதீனம், தருமபுர ஆதீனம் 27ஆவது குருமகா சந்நிதானம் மற்றும் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர். அதில், ' தமிழ்நாட்டில் உள்ள 18 ஆதீனங்களும் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக இருந்தால் சைவம் தழைத்தோங்கும்.
மக்களுக்கு என்ன தேவையோ, அதை செய்து கொடுப்பதோடு, ஆன்மிகப் பணியையும் ஆதீனங்கள் செய்து வருகின்றனர். தருமபுரம் ஆதீன மடத்தில் பன்னிரு திருமுறைகளை 20ஆயிரம் பிரதிகளாக உருவாக்கி, 16 தொகுதியாக 20 நாடுகளில் வெளியிட்டுள்ளோம்.
தமிழ் வித்வான்களுக்கு விருது, ஓதுவர்களுக்கு மரியாதை, தமிழ் வளர்ப்பவர்களுக்கு மரியாதை, தமிழ்ப் புத்தக வெளியீடு, ஞானசம்பந்தர் பெயரில் இதழ் ஆகியவற்றை வெளியிட்டு வைசம் என்றால் தமிழ் என்பது போல தமிழ்ப்பணியை செய்து வருகிறோம் ' என்றனர்.
தொடர்ந்து ஆதீனம் பேசுகையில், ' மக்கள் இன்றையப் பசியைத் தீர்த்தால் போதும் என நினைக்கிறார்கள். உப்பு தின்றால் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். கடன் தீர்க்கிற சுவாமி என்று அந்த சுவாமியைத் தேடி போய் பத்து லட்சம் ரூபாய் வரை கடன் வைப்பார்கள் என்ற கதை போல தான்... போலி ஆன்மிகவாதிகள்' என்று தெரிவித்தார்.