மதுரை:மேலூர் அருகே தெற்குத்தெரு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், அரையாண்டு தேர்வுக்கு வகுப்பறைகள் பயன்படுத்தப்பட்டதால் 9ஆம் வகுப்பு மாணவர்கள் முப்பதுக்கும் மேற்பட்டோர் மரத்தடியில் அமர்ந்து படித்துள்ளனர். அப்போது, வேகமான காற்று வீசியதில் அந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 13 மாணவிகள் உட்பட மொத்தம் 16 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
மரம் விழும் சத்தம் கேட்டு மாணவர்கள் சுதாரித்து எழுந்து ஓடியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. காயமடைந்த மாணவர்களுக்கு தெற்குத்தெரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.