தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் 80 சதவீதம் கல்வித்துறையிலிருந்து வருகிறது - மதுரை உயர்நீதிமன்றம் கருத்து

Madurai High Court: 2016ல் பணப்பலன்கள் வழங்க உத்தரவிட்டதை நிறைவேற்றாததால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் IAS அதிகாரி காகர்லா உஷா மற்றும் நந்தகுமார் IAS ஆகிய இரு அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு முடித்து வைத்து உத்தரவிடப்பட்டது.

defamation-case-mdu-hc-court-issued-warrant-against-ias-officers-today-ordered
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் 80 சதவீதம் கல்வித்துறையிலிருந்து வருகிறது - மதுரை உயர்நீதிமன்றம் கருத்து

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 7:35 PM IST

மதுரை:நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் சின்னதாய். கரிவலம்வந்தநல்லூர் அரசு மேனிலைப்பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் தூய்மைப் பணியாளராக கடந்த 1988ல் நியமனம் ஆனார். தனது பணியை வரன்முறை செய்யக் கோரிய வழக்கில், வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் மற்றும் அனைத்து பணப்பலன்களையும் வழங்க வேண்டுமென உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதனிடையே சின்னதாய் இறந்தார். இதனால், அவரது மகன் பரமன் தரப்பில், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவின் முந்தைய விசாரணையில் பள்ளி கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, பள்ளி கல்வித்துறை இயக்குநர் நந்தகுமார் ஆகியோரை பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழக்கு இன்று (செப்.11) நீதிபதி நீதிபதி பட்டு தேவானந் முன்பு விசாரணைக்கு வந்தது. IAS அதிகாரி காகர்லா உஷா மற்றும் நந்தகுமார் IAS ஆகிய இரு அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது நீதிபதி, பள்ளி கல்வித்துறை செயலர் காகர்லா உஷா, பள்ளி கல்வித்துறை இயக்குநர் நந்தகுமார் ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அதனை ஏன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பின்பற்றவில்லை எனவும், இதே நிலை சாதாரண மனிதர்களுக்கு பொருந்துமா? இந்த நிலையை காவல்துறையினர் கடைப்பிடிப்பார்களா? என கேள்வி எழுப்பினார்.

நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத சென்னை காவல்துறை ஆணையரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கலாமா? என கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை மதியம் 2.15 மணிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தார்.

இதையும் படிங்க:ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி.. சம்பவ இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் ஆய்வு.. காவல்துறை விளக்கம் என்ன?

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் மதியம் 2.15 மணிக்கு நீதிபதி பட்டு தேவானந் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது IAS அதிகாரி காகர்லா உஷா மற்றும் நந்தகுமார் IAS ஆகிய இரு அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து நீதிபதி, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் 80 சதவீத கல்வித்துறையில் இருந்து தான் தாக்கல் செய்யப்படுகிறது என கருத்து தெரிவித்தார்.

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற ஏழு ஆண்டுகள் எடுத்துக் கொள்வதா எனவும் கல்வித்துறையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் பள்ளிகளில் வேலை பார்த்த கடைநிலை ஊழியர்களான துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், பள்ளியில் காவலராக பணிபுரிவர்களுக்கான பணப்பலன்கள், பதவி உயர்வுகளை நடைமுறைப்படுத்தவில்லை என வேதனை தெரிவித்தார். மேலும், அதிகாரிகள் தரப்பு விளக்கத்தை ஏற்ற நீதிபதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து அதிகாரிகள் இருவரும் தங்கள் மீது போடப்பட்ட பிடிவாரண்ட் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்ற மனு தாக்கல் செய்தனர். அதை ஏற்ற நீதிபதி பிடிவாரண்டை உத்தரவை ரத்து செய்து உத்தரவிடப்பட்டது.

இதையும் படிங்க:தனியார் வாகனத்தில் அரசு முத்திரைகள் - தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details