மதுரை: மதுரை மாவட்டம் பனங்காடியைச் சேர்ந்த செல்வராணியின் மகள் ஜெயஸ்ரீ (24) என்பவருக்கும் சரவணன் என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே ஜெயஸ்ரீ காணாமல் போய்விட்டார்.
இந்நிலையில் ஜெயஸ்ரீயை கண்டுபிடித்துத் தர உத்தரவிட வேண்டும் என்று, அவரது தாயார் செல்வராணி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் காவல்துறையினர் ஜெயஸ்ரீயை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். பின்னர் அவர் சென்னையில் இருப்பதை அறிந்து அங்கு சென்று விசாரித்தபோது, ஜெயஸ்ரீ தனது பள்ளித் தோழியான துர்காதேவியுடன் தனி வீட்டில் இணைந்து வாழ்வது தெரியவந்தது.
தன்னை ஆணாக உணர்ந்த ஜெயஸ்ரீ, ஆண் போலவே முடி வெட்டிக் கொண்டு, சட்டை பேண்ட் அணிந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினர் கடந்த மாதம் 27 ஆம் தேதி அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது ஜெயஸ்ரீ, 'தனது பள்ளிப் பருவ தோழியான துர்காதேவி மீது தனக்கு நாட்டம் ஏற்பட்டதாகவும், கல்லூரி காலத்தில் இருவரும் கணவன் மனைவி போலவே வாழ்ந்து வந்ததாகவும்' தெரிவித்தார். 'இந்த உறவை அறிந்த தனது பெற்றோர், அதைத் தடுப்பதற்காகவே தனக்கு திருமணம் செய்து வைத்ததாகவும்' கூறினார்.