மதுரை: மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது SC/ST பிரிவு போல OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்தக்கோரிய வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளைக்கு வந்தது.
மதுரை மேலக்காலை சேர்ந்த தவமணி தேவி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "2001ஆம் ஆண்டிலேயே தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில், மத்திய சமூக நீதி அமைச்சகமும், OBC அடிப்படையிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பரிந்துரை செய்தது.
ஆனால், அதுபோல கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. OBC அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்தப்படும் போதே, அதனடிப்படையில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்க ஏதுவாக இருக்கும்.
2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது SC/ST பிரிவு போல, OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, அகில இந்திய OBC ஒருங்கிணைப்புக்குழு மனு அளித்த நிலையில் எவ்வித பதிலும் தற்போது வரை அளிக்கப்படவில்லை.
தற்போது, கரோனா நோய்த்தொற்று காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆகவே, 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது SC/ST பிரிவு போல OBC பிரிவின் அடிப்படையிலும் கணக்கெடுப்பை நடத்துவது குறித்த அகில இந்திய OBC ஒருங்கிணைப்புக் குழுவின் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.