தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சட்டவிரோத மணல் கொள்ளை: பொதுப்பணித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு - மதுரை

மதுரை: சட்டவிரோத மணல் குவாரிகளால் முக்கொம்பு அணை, கொள்ளிடம் அணை சேதமடைந்தது தொடர்பான வழக்கில் பொதுப்பணித் துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

By

Published : Apr 15, 2019, 11:30 PM IST

முசிறியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் சட்டவிரோதமாக நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. மணல் அள்ளுவதற்காக ஆற்றுக்குள் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றில் நீரின் போக்கு மாறியுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் கொண்டையன்பட்டி, கரியமாணிக்கம், திருவாசி, கிள்ளியநல்லூர், ஆமூர் கிராமங்களில் சட்டவிரோதமாக மணல் குவாரி நடைபெறுவதால் முக்கொம்பு அணையும், பிச்சாண்டு கோவில் மற்றும் திருவாணைக்காவல் கிராமங்களை இணைத்து கட்டப்பட்டிருக்கும் கொள்ளிடம் பாலமும் சேதமடைந்துள்ளன.

சட்டவிரோத மணல் குவாரியை தடுக்க நடவடிக்கை எடுக்காத பொதுப்பணித் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், முக்கொம்பு அணை, கொள்ளிடம் பாலம் சீரமைப்புப் பணிக்கான செலவை பொதுப்பணித் துறை அலுவலர்களிடம் இருந்து வசூலிக்கவும் கோரி 10.9.2018இல் அலுவலர்களுக்கு மனு அனுப்பினேன். அந்த மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சட்டவிரோத மணல் குவாரி தொடர்பாக சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு, மனு தொடர்பாக பொதுப்பணித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details