தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன். தனது மனைவி இறந்த பின்னர் சமூக சேவையில் நாட்டம் கொண்ட யாசகர் பூல்பாண்டியன், மக்களிடமிருந்து யாசகமாகப் பெற்ற பணத்தில் அரசுப் பள்ளிகளுக்கு உதவிபுரிந்து வந்தார்.
கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த பூல்பாண்டியன், கரோனா பொது முடக்கம் காரணமாக, மதுரையில் தங்கி பல்வேறு இடங்களில் யாசகம் பெற்றுவந்தார்.
அந்தப் பணத்திலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி தற்போது வரை 15 தவணையாக தலா ரூபாய் 10 ஆயிரத்தை கரோனா நிவாரண நிதியாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.
இதற்காக கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறந்த சமூக சேவகர் விருது மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினயால் வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இந்நிலையில் பூல்பாண்டியனை, தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பாராட்டி சால்வை அணிவித்தார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாணிக்கம், சரவணன், அரசு அலுவலர்கள் பூல்பாண்டியின் கொடைத்தன்மையைப் பாராட்டி சால்வை அணிவித்தனர்.