மதுரை:பேரையூர் தாலுகா, மேலப்பட்டி கிராமத்தில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை (VCK flagpole issue) காவல்துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தின் பின்னணியில் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக செயல்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்குள்ள விசிக கொடிக்கம்பத்தை காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவு என்று பொய்க் கூறி அகற்றியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பான தகவல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி எம்.பி.யுமான தொல்.திருமாவளவனின் பார்வைக்கு எட்டியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் கொடிக்கம்பத்தை தகர்த்த காவல்துறை அதிகாரிகளை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கண்டித்திருப்பது மிகுந்த ஆறுதல் அளிப்பதாகவும், நேர்மை திறத்துடன் அதிகார அத்துமீறலைக் கண்டித்துள்ள நீதி அறவோருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றி என்றும் தொல்.திருமாவளவன் (Thol.Thirumavalavan) தெரிவித்துள்ளார்.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் பேசிய அக்கட்சியின் இளஞ்சிறுத்தைகள் பாசறை மாநில துணைப் செயலாளர் தா.மாலின், 'கடந்த சில நாட்களுக்கு முன்பாக மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில் அமைந்துள்ள மேலப்பட்டி கிராமத்தில் விசிக கொடிக்கம்பம் காவல் துறையினரால் அகற்றப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, 'மீண்டும் அதே இடத்தில் விசிக கொடிக்கம்பத்தை நிறுவ வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளது.
விசிக கொடிக்கம்பம் அகற்றம்:இதையடுத்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாநில துணைச் செயலாளர் மாலின் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ''மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவிலுள்ள மேலப்பட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பத்தை அங்குள்ள ஆதிக்க சாதியினரும், காவல்துறையினரும் சேர்ந்து கொண்டு நேற்று முன்தினம் அகற்றியுள்ளனர். இதைக் கண்டித்து விசிகவின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டன அறிக்கை விடுத்திருந்தார். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
மேலப்பட்டி கிராமத்தில் தனிநபருக்குச் சொந்தமான ஒரு அடி அகலமுள்ள இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதன் அருகே இந்தியக் குடியரசுக் கட்சியின் கொடிக்கம்பமும் கடந்த 40 ஆண்டுகளாக உள்ளது. ஆனால், இவ்விரண்டு கம்பங்களையும் அகற்ற குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர், பிறரையும் சேர்த்துக் கொண்டு காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு வந்ததாக தெரியவருகிறது.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவு என்று திட்டமிட்டு ஒரு பொய்யான தகவலைப் பரப்பி, விசிக கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு 100-க்கும் மேற்பட்ட காவலர்கள், 4 துணை ஆய்வாளர்கள், இரண்டு ஆய்வாளர்கள், ஒரு டிஎஸ்பி தலைமையில் இந்த செயலில் இறங்கினர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இதனைத் தடுக்க வந்த ஆண்கள், பெண்கள் அனைவரையும் துன்புறுத்தியுள்ளனர்.
பெண்கள் மீது தடியடி: அந்தக் கொடிக்கம்பப் பீடத்தின் மீது நின்று முழக்கமிட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மீது காவல்துறையினர் ஈவு இரக்கமின்றி தடியடி பிரயோகம் செய்துள்ளனர். இதனால், 8-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு காயம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில், 24 பேர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையா ஏவல்துறையா?:காவலரை பணி செய்ய அனுமதிக்கவில்லை என்ற அடிப்படையில் வழக்கு தொடுக்கலாம். ஆனால், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால் காவல் துறை யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது? டிஜிபி சைலேந்திரபாபு யார் கையில் இருக்கிறார்? தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் காவல்துறை உள்ளதா? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.