மதுரை:வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி மகனின் திருமண விழாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்திவைத்தார். இதில் அமைச்சர்கள் பொன்முடி, கண்ணப்பன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ஏ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.என்.நேரு, கா.ராமச்சந்திரன், பெரிய கருப்பன், மா.சுப்ரமணியன், செஞ்சி மஸ்தான், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சக்கரபாணி, மெய்யநாதன், கயல்விழி செல்வராஜ், மனோ.தங்கராஜ், அன்பில்மகேஷ் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், 'திருமணத்திற்கு வந்துள்ள அமைச்சர்கள், கூட்டணி கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்கிறேன். மணமக்களை வாழ்த்த கிடைத்த இந்த வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை திருமண விழாபோல் அல்லாமல் 'மண்டல மாநாடு' எனக் குறிப்பிட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.
அமைச்சர் மூர்த்தி பொதுக்கூட்டம், அரசு நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் மிகப்பிரமாண்டமாகத் தான் செய்வார். தனி முத்திரை மற்றும் பிரமாண்டத்தை பதிப்பார். அதனால் மகனின் திருமணத்தை கட்சிக்கு பயன்பட வேண்டும், கட்சியின் ஆட்சியின் சாதனை தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தியுள்ளார்.
ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வகையில் செயல்படக்கூடியவர் பி.மூர்த்தி. அமைச்சரவை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது மூர்த்திக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக முடிவெடுத்தோம். அப்போது படிக்காதவர், கோபக்காரர் எப்படி அமைச்சர் பதவி வழங்குவது என யோசித்து அச்சத்தோடு வணிக வரித்துறையை கொடுத்தோம். அச்சப்பட்டோம். ஆனால், பொறுமையின் சிகரமாக மாறி சிறப்பாகச் செயல்படுகிறார்.
இப்போது நிதிச்சுமை உள்ளது. தற்போது வணிகவரி பதிவுத்துறை வரலாற்றில் 13 ஆயிரத்து 913 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை, திங்கள் தோறும் பத்திரப்பதிவுத்துறை சார்பில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. சார் பதிவாளர் அலுலவலகங்களில் மாற்றுதிறனாளிகளுக்கான வசதி, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து வந்த அலுவலகங்களில் உயர மேடை நீக்கியது; நமது திராவிட மாடல் ஆட்சியில்தான்.
மக்களுக்கு நம் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது: போலி பத்திரப்பதிவுகளை ரத்து செய்வதற்காக சட்டத்திருத்தம் குடியரசுத்தலைவரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே இது போன்ற சாதனை செய்யப்பட்டுள்ளதால் மற்ற மாநிலங்கள் இது குறித்து கேட்கின்றனர்.