தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறுதி வாக்காளர் பட்டியலை ரத்துசெய்யக் கோரி வழக்கு: தலைமைத் தேர்தல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு

மதுரை: ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை ரத்துசெய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு
தலைமை தேர்தல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு

By

Published : Feb 10, 2021, 1:23 PM IST

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த சைலப்ப கல்யாண் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்தார்.

அதில், "100 விழுக்காடு வாக்குப்பதிவு என்பதை இலக்காகக் கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட்டுவருகிறது. ஆனால் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாதது, ஒருவரின் பெயரே 2 முறை இடம்பெற்றிருப்பது போன்ற பிரச்சினைகளால் சரியான எண்ணிக்கையுடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது இல்லை.

வாக்காளர்கள் பெரும்பாலும் தங்களின் பெயர் இருப்பதை பூத் ஏஜெண்டுகள் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்கின்றனர்.

இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாதது, ஒருவரின் பெயரே இருமுறை பதிவாகி இருப்பது போன்றவை வாக்கை தவறாகப் பயன்படுத்துவதற்கும், 100 விழுக்காடு வாக்குப்பதிவு என்பது இயலாமல் போவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

2021 ஜனவரி 20ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலிலும் இந்தத் திருத்தங்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.

தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்த இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும் இருமுறை பதிவுசெய்யப்பட்ட பெயர்களை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே ஜனவரி 20ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை ரத்துசெய்து திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, இது குறித்து இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 50% பாடத்திட்டம் குறைப்பு

ABOUT THE AUTHOR

...view details