சோதனை ஓட்டத்தில் 5.30 மணி நேரத்தில் மதுரை வந்த வந்தே பாரத் ரயில் மதுரை: தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வந்தே பாரத் ரயில் வருகிற செப்டம்பர் 24ஆம் தேதி இந்தியப் பிரதமரால் துவங்கி வைக்கப்படவுள்ள நிலையில், இன்று (செப்.21) சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இது குறித்து ரயில் ஆர்வலர் அருண் பாண்டியன் தொலைபேசி வாயிலாக ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறியபோது, "சென்னை - நெல்லை இடையே வருகிற செப்டம்பர் 24ஆம் தேதி முதல் வந்தே பாரத் ரயில் இயங்க உள்ள நிலையில், இன்று அதற்கான சோதனை ஓட்டமாக சென்னையில் இருந்து இன்று (செப்.21) காலை 7.35 மணியளவில் புறப்பட்டது. இந்த ரயில் சுமார் 3 மணி நேரம் 40 நிமிடங்களில் சரியாக காலை 11.20 மணிக்கு திருச்சியை வந்தடைந்தது.
பின்னர் அங்கிருந்து சரியாக 11.25 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு பிற்பகல் 1.15 மணிக்கெல்லாம் வந்து சேர்ந்தது. அதன் பின்பு மாலை 3 மணி அல்லது 3.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும். மேலும், ஏறக்குறைய 5 மணி நேரம் 50 நிமிடங்களில் மதுரையை வந்தடைந்தது. இது ஒரு சாதனை பயணம் ஆகும்" என்றார்.
முன்னதாக இதன் தொடக்க விழா குறித்து நெல்லையில் ஆய்வு மேற்கொண்ட மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் 9 வந்தே பாரத் ரயில்களை காணொலிக் காட்சி மூலம் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
அதில் ஒன்றுதான் நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில். வழக்கமாக 8 பெட்டிகள் இணைக்கப்படும். தேவையைப் பொறுத்து அதன் எண்ணிக்கைகள் கூடலாம். மேலும், இந்த ரயில் நெல்லையில் புறப்பட்டு விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" என்றார்.
சோதனை ஓட்டத்திற்காக சென்னையில் இருந்து புறப்பட்டு நெல்லை செல்லும் வழியில் மதுரை வந்தடைந்தபோது, ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரயில் ஆர்வலர்கள் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க:நிதி மோசடி வழக்கு; முதலீடு செய்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய நியோமேக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு!