தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 30, 2020, 7:17 PM IST

ETV Bharat / state

நீட் முறைகேட்டில் சான்றிதழ்கள் பறிப்பு வழக்கு: சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு!

நீட் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கருதப்படும் மாணவர் பவித்ரனின் சாதி சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழை வழங்க மறுத்த தேனி நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சிபிசிஐடி காவல் துறையினர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

Certificates Flush Case in NEET Abuse: CBCID Response Order
Certificates Flush Case in NEET Abuse: CBCID Response Order

மதுரை:நீட் தேர்வில் முறைகேடு செய்ததாகக் கருதப்படும் மாணவர் பவித்ரனின் சாதி சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழை வழங்க மறுத்த தேனி நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சிபிசிஐடி காவல் துறையினர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் பகுதியைச் சேர்ந்த பவித்ரன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக, சிபிசிஐடி காவல் துறையினர் தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகள் முடிந்து தற்போது பிணையில் உள்ளேன்.

இவ்வழக்கு விசாரணையின் போது, எனது 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகிய அனைத்து சான்றிதழ்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர். இவை, தேனி நீதித்துறை நடுவரிடம், சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தோடு, இணைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை திரும்ப வழங்குமாறு கோரப்பட்ட வழக்கில், 10,12ஆம் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க உத்தரவிடப்பட்டது.

ஆனால், பள்ளி மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழை வழங்க மறுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, எனது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு தடை விதித்து, எனது சாதி, பள்ளி மாற்று சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி தாரணி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மாணவரின் மேற்படிப்பிற்காக சான்றிதழ் வழங்க வேண்டும் என கூறப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, தேனி சிபிசிஐடி காவல்துறையினர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: மருத்துவ மாணவர்களின் விவரங்கள் தேசிய தேர்வு முகமையிடம் ஒப்படைக்க உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details