மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில், "சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளேன். இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து, பின் சிபிஐ காவல் துறையினர் விசாரணை செய்து அறிக்கைத் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் உள்ள 132 சாட்சிகளில், முக்கிய சாட்சிகளான ரேவதி மற்றும் பியூலா உட்பட 47 சாட்சிகளை மட்டுமே இதுவரை விசாரித்துள்ளனர்.
47 சாட்சிகளிடம் விசாரணை நடத்த ஏறக்குறைய 3 ஆண்டுகள் ஆகியுள்ளன. மீதமுள்ள சாட்சிகளை விசாரிக்க இன்னும் குறைந்தது 5 வருடங்கள் ஆகும். கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளேன். ஏற்கனவே பல முறை ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. எனவே, எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று(ஏப்.19) நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையானது இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது என்றும், இன்னும் 6 சாட்சிகளை மட்டுமே விசாரணை செய்ய வேண்டியுள்ளது என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் 4 மாதங்களாக குறுக்கு விசாரணை என்ற பெயரில் வழக்கு விசாரணையை தாமதமாக்குவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.