தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் - சௌமியா அன்புமணி

மதுரை, திருமங்கலத்தில் மரக்கன்று நடும் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த, பசுமை தாயகத்தின் சௌமியா அன்புமணி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

மதுரை
madurai

By

Published : Jul 13, 2023, 3:27 PM IST

சௌமியா அன்புமணி பேட்டி

மதுரை: திருமங்கலத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த, பசுமை தாயகத்தின் சௌமியா அன்புமணி மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, ''பசுமைத்தாயகம் நாளான ஜூலை 25ஆம் தேதி 2 லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்திருக்க வேண்டும் என்ற பசுமைத்தாயகம் நிறுவனத்தின் தலைவர் விருப்பத்திற்கு இணங்க இரண்டு லட்சம் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். அதன் ஒரு நிகழ்ச்சியாக இன்று மதுரை திருமங்கலத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடக்கிறது.

அதைத்தொடர்ந்து காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடக்கவிருக்கிறது. இதில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வுக்காக 10 லட்சம் பேரிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். அதை ஆவணம் செய்வது, பின்னர் அதை ஐக்கிய நாடுகள் அவையில் சமர்ப்பிப்பது போன்ற விஷயங்களை பேசவிருக்கிறோம்'' என்றார்.

மகளிர் உதவித் தொகை நிபந்தனை குறித்த கேள்விக்கு, ''அது அரசாங்கத்தின் முடிவு. நிர்வாக காரணங்களால் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதை சட்டரீதியாக நாம் பின்பற்ற வேண்டும்'' என்றார். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கேள்விக்கு, ''கண்டிப்பாக சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்'' என்றார்.

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம் குறித்த கேள்விக்கு, ''பாமக தலைவரும் தேர்தல் வாக்குறுதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதனைச் செவ்வனே செயல்படுத்த வேண்டும்'' என்றார்.

தமிழக அரசின் மது பாக்கெட் அறிமுகம் குறித்த கேள்விக்கு, ''மதுவிலக்குக்கு எதிரான கட்சி பாமக. பசுமைத் தாயகம் என்றாலே சமுதாய வளர்ச்சியை முக்கியமாக பார்க்கின்ற அமைப்பாகும். ஏழை எளியவர்களுக்கு எதிரான மது விற்பனை எதுவாக இருந்தாலும் அதை கண்டிப்பாக வரவேற்கப் போவதில்லை'' என்றார்.

நெடுஞ்சாலைத்துறை வேலையின் போது மரங்கள் வெட்டப்படுவது குறித்த கேள்விக்கு, ''சென்னையில் ரயில் நிலையத்தில் மரத்தை வெட்டும்போது பெரிய போராட்டம் நடத்தி இருக்கிறோம். அதற்கு அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள், ஒரு மரம் வெட்டும்போது அதற்கு இணையாக 10, 20 அல்லது 100 மரங்கள் கூட நடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு மரத்தை எடுத்தாலும் பசுமைத் தாயகம் அமைப்பு போராட்டம் செய்யும். செங்கல்பட்டில் ஒரு இடத்தில் பெரிய ஆலமரத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டபோது, வேறு ஒரு இடத்தில் நட்டு அதற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறோம்'' என்றார்.

குவாரிகளில் கனிம வளம் கொள்ளையடிப்பது குறித்த கேள்விக்கு, ''நெய்வேலி கடலூரில் நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி இருக்கிறோம். காவிரி காப்போம், வைகை காப்போம் என கனிம வளங்கள் மற்றும் நீர் வளங்களைப் பாதுகாக்க எல்லா முயற்சிகளையும் பசுமைத் தாயகம் முன்னெடுத்து நடத்தி வருகிறது. எங்களுடைய தேர்தல் அறிக்கையை படித்தாலே தெரியும். எதுவாக இருந்தாலும் இதை நாங்கள் குறிப்பிட்டு தெரிவித்திருக்கிறோம்'' என்றார்.

பேட்டியின் போது பாமக பொருளாளர் திலகபாமா பசுமைத்தாயக மாநில துணைச் செயலாளர் சண்முகநாதன் மற்றும் பாமக மாவட்ட செயலாளர்கள் வீரக்குமார், செல்வம், எஸ்கே தேவர், அழகர்சாமி, ராஜா வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் நடராஜன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் இருந்தனர்.

இதையும் படிங்க:திமுக பிரமுகர் லாட்டரி விற்பனை; இடதுசாரி அமைப்பினர் மீது கொலைவெறித் தாக்குதல்... நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details