மதுரை மாவட்டம் சொக்கிகுளத்தைச் சேர்ந்த சத்யமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சூழலில் மருத்துவர்கள், காவல் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், ஊடகப் பணியாளர்கள் என பலர் களப்பணியாற்றி வருகின்றனர்.
சமீபகாளமாக களத்தில் நின்று பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினர், அம்மா உணவகத்தில் பணியாற்றும் பணியாளர்கள், ஊடக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என பலரும் பொதுநலத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
நெருக்கடி மிகுந்த இந்த காலத்தில் முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம். ஆகவே மருத்துவர்கள், காவல் துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், ஊடகப் பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், அரசு, அரசு சாராத தன்னார்வலர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடலை முழுமையாக பாதுகாக்கும் வகையிலான பாதுகாப்பு ஆடைகள், முகக்கவசங்கள், கையுறைகள் உள்ளிட்டவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.