மதுரை:விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் கார்த்திகேயன். கொண்டரெட்டி பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இவர், இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகத்தில் (எல்ஐசி) 1984ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேர்ந்த போது, 1982ம் ஆண்டு திருநெல்வேலி வருவாய்த்துறை அதிகாரிகள் கொடுத்த சாதிச்சான்றிதழை சமர்ப்பித்து பணியில் சேர்ந்தார்.
பணியில் சேர்ந்த பின், கார்த்திகேயனின் சாதி சான்றிதழை சரிபார்க்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு எல்ஐசி கடிதம் அனுப்பியிருந்தது. பின்னர் மாவட்ட ஆட்சியர், சாதிச்சான்றை சரி பார்த்து அது மெய்த் தன்மை உடையது என்ற அறிக்கையை 1990ல் அளித்தார். இதற்கிடையே கார்த்திகேயனுக்கும், அவரது சகோதரருக்கும் பதவி உயர்வு கிடைத்தது. இதையடுத்து மாநில கூர்நோக்கு குழுவுக்கு கடிதம் அனுப்பிய எல்ஐசி, இருவரின் சாதிச் சான்றையும் சரிபார்க்க வலியுறுத்தியது.
அதன் அடிப்படையில், விசாரணைக் கடிதத்தை பெற்ற கார்த்திகேயனின் சகோதரர் ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட தனது கொண்டா ரெட்டி சாதி சான்றை மீண்டும் சரி பார்ப்பது தவறு என 1997ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே 1990-ம் ஆண்டு மாவட்ட ஆட்சியரால் சரிபார்க்கப்பட்ட சாதிச் சான்றை மீண்டும் விசாரணைக்கு எல்ஐசி அலுவலகம் அனுப்பியது தவறு என்றும், எனவே விசாரணை கடிதத்தை ரத்து செய்வதாகவும், ஆட்சியர் அளித்த உத்தரவை உறுதிபடுத்தியும் உத்தரவிட்டது.
பின்னர், கார்த்திகேயன் பழங்குடி இனத்தைச் சார்ந்தவர் அல்ல என புகார் கடிதம் வந்ததாகக்கூறி,அவரிடம் எல்ஐசி விளக்கம் கேட்டது. மேலும் கார்த்திகேயனின் சாதிச் சான்றிதழை சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதிகள், ”ஏற்கனவே கார்த்திகேயனின் சாதிச் சான்றிதழ் இரண்டு முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. பணி வழங்கும் அதிகாரி சாதி சான்றை ஒரு முறை சரி பார்த்து விட்டால் மீண்டும் மீண்டும் சரிபார்ப்பு என்ற பெயரில் தொந்தரவு கொடுக்க கூடாது. கார்த்திகேயனின் சாதிச் சான்று ஏற்கனவே 1990 ஆம் ஆண்டு சரிபார்க்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது மீண்டும் அவரது சாதிச் சான்றை சரி பார்க்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் எல்ஐசி வழக்கு தொடுத்த போது, 1990 ஆம் ஆண்டு சரிபார்க்கப்பட்ட தகவலை சொல்லாமல் உண்மையை மறைத்துள்ளது.
ஒரு மதிப்புமிகு அரசு நிறுவனமான எல்ஐசி, நீதிமன்றத்தில் உண்மையை மறைத்து வழக்கு தொடர்ந்ததற்காக ரூ.2 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டும். அந்த அபராத தொகையை சென்னை புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையத்திற்கு வழங்க வேண்டும். இரண்டு லட்ச ரூபாய் தொகையை வழக்கு தாக்கல் செய்வதற்காக பிரமாண பத்திரம் (Affidavit) தயார் செய்த அதிகாரியிடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம். கார்த்திகேயனுக்கு சேர வேண்டிய ஓய்வு கால பலன்கள் அனைத்தையும் 4 வாரத்திற்குள் வழங்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ஜெயலலிதா சொத்துக்களை ஏலம் விட வழக்கறிஞர் நியமனம்: கர்நாடகா அரசு அறிவிப்பு!