மதுரை:திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், “நாவல்பட்டு ஊராட்சித் தலைவராக 2020ஆம் ஆண்டு ஜேம்ஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அண்ணாநகர் பகுதி நாவல்பட்டு ஊராட்சி எல்லைக்குள் வரும் நிலையில், குடியிருப்போர் நலச்சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மக்களிடம் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருவதாகக் கூறி ஜேம்ஸ் பணம் பெற்றுள்ளார்.
மேலும், ஜல் ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் குழாய் இணைப்புகளை வழங்குவதாகவும், ஏற்கனவே அண்ணாநகரில் பல பகுதிகளில் குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ள நிலையில், தனிக்குழாய் இணைப்பு எனக்கூறி, ஒரு நபரிடமிருந்து ஆயிரத்து 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எந்த வித பில் கொடுக்காமல் வசூல் செய்துள்ளார். மேலும், பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல பகுதிகளில் செய்த பணிகளில் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளார்.
இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், துணை ஆட்சியரை விசாரணை செய்து அறிக்கை அளிக்க திருச்சி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த குற்றச்சாட்டு குறித்து ஆய்வு செய்த துணை ஆட்சியர், எந்த விதமான அறிக்கையையும் ஆட்சியருக்கு சமர்ப்பிக்கவில்லை. ஊராட்சி மன்றத் தலைவரான ஜேம்ஸ், தனது அதிகாரம் மற்றும் பண பலத்தைப் பயன்படுத்தி விசாரணைப் போக்கை மாற்றி உள்ளார்.