மதுரை:மதுரை மாநகராட்சியின் முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கொலை வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது எனக் கூறி விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
மதுரை காமராஜர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. இவர் மதுரை மாநகராட்சியின் திமுக முன்னாள் மண்டலத் தலைவராகவும், மாமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அரசியல் முன்விரோதம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் பல தரப்பினர் தாக்குதல் நடத்தியதாகவும், தனது வீட்டின் மீது பலமுறை பெட்ரோல் குண்டு வீசி கொலை முயற்சி செய்ததாகவும் கூறியிறுந்தார்.
மேலும் தன் மீதான நிலுவையில் உள்ள வழக்குகளில் விசாரணையின் போது மட்டும் ஆஜராகி விட்டு கர்நாடக மாநிலம் பெங்களூர் சென்றிருந்த தாகவும், இந்நிலையில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி பெங்களூர் பனசாவடி பகுதியில் உள்ள உணவகத்தில் டீ குடித்த கொண்டிருந்த போது திடிரென காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் தன்னை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியதாக கூறியுள்ளார்.