மதுரை:மதுரை மாவட்டத்தின் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நாளை முதல் துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. நாளை காலை அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி பாலமேட்டிலும், மூன்றாவது போட்டி அலங்காநல்லூரிலும் நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் கடந்த பத்தாம் தேதி ஆன்லைன் மூலம் பதிவு செய்தனர்.
அதைத்தொடர்ந்து இன்று மதியம் அவனியாபுரம் போட்டியில் பங்கேற்க ஆயிரம் காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு வேலைகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்வதற்காக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி உள்ளிட்டோர் நேரில் வந்திருந்தனர்.