மதுரை:மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு பட்ஜெட்டை பொறுத்தவரை வார்த்தை ஜாலத்தால் எழுதப்பட்ட பகல் கனவு பட்ஜெட்டாக உள்ளது. தமிழ்நாடு அரசின் கடன்தொகை ரூ. 6 லட்சம் கோடியை தாண்டிச்செல்கிறது.
உள்நாட்டு உற்பத்தி அளவீட்டில் 26 விழுக்காடு கடன் என்ற அளவில் தமிழ்நாடு தற்போது உள்ளது. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு மட்டும் தான் கடந்தாண்டு அதிக கடன் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டின் கடன் சுமையில் ரூ. 7 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி கடனை குறைத்ததாக கூறிவருகின்றனர். தற்போது அறிவித்துள்ள பட்ஜெட்டில் எந்த ஒரு பயனும் இல்லை. இப்படியே சென்றால் இனி வரும் ஆண்டுகளில் அரசு ரூ. 80 ஆயிரம் கோடி கடன் வாங்க வேண்டியிருக்கும். கடுமையான கடன் சுமையில் தமிழ்நாடு மக்களை திமுக அரசு தள்ளுகிறது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு பெயர் சூட்டுகிறது
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடனை குறைத்து வித்தியாசமான பட்ஜெட்டை அமல்படுத்துவதாக சொல்லிவிட்டு இப்படியொரு வெற்று பட்ஜெட்டை தாக்கல் செய்வது மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு 1000 ரூபாய் கொடுப்போம் என்று கூறினர். கேஸ் விலையை குறைப்போம் என்று கூறினர். ஆனால், தற்போது ஏற்கனவே இருந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டனர். அரசு பள்ளி மாணவிகளுக்கு 1000 ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் கொடுப்பதாக கூறியதை நிறைவேற்றவில்லை.
தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டு வேறு திட்டத்திற்கு நிதியை மாற்றி கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். இந்த இரண்டு திட்டத்தையும் குழப்புகிறார்கள். தெளிவில்லாத, புரிதல் இல்லாத, தொலைநோக்கு பார்வை இல்லாத பட்ஜெட் ஆகத்தான் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு தமிழ்நாடு அரசுக்கு நிலுவைத்தொகையை முழுமையாக கொடுத்ததால் வருவாய் வந்துள்ளதாக தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாக உண்மையை கூறியுள்ளது. மத்திய அரசு எந்த ஒரு மாநிலத்திற்கும் நிலுவைத்தொகையை நிறுத்தி, பாரபட்சம் காட்ட மாட்டார்கள்.
மத்திய அரசின் நிறைய திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு புதிய பெயர் சூட்டி திட்டங்களை அறிவித்து வருகின்றது. புதிய பெயர் சூட்டினாலும் அந்தத் திட்டம் தமிழ்நாடு மக்கள் பயன் பெற வேண்டும். கடன் சுமையில் இருந்து தமிழ்நாட்டை வெளியே கொண்டு வரவேண்டும். தமிழ்நாட்டில் புதிதாக வருவாயை ஈட்ட வழி ஏற்படுத்த வேண்டும்.
பிஜிஆர் நிறுவன ஊழல் - ஆளுநரிடம் புகார்
பிஜிஆர் எனர்ஜி நிறுவனத்தில் முதலில் ரெய்டு விட வேண்டும். பிஜிஆர் நிறுவன ஊழல் தொடர்பாக வரும் திங்கட்கிழமை (மார்ச் 21) ஆளுநரை சந்தித்து புகார் அளிக்க உள்ளோம். திமுக அரசு கண்ணாடி கூண்டுக்குள் உட்கார்ந்து கல் எறியக்கூடாது. ஊழல் செய்யும் உங்கள் அமைச்சர் மீது தக்க நடவடிக்கை எடுத்து வித்தியாசமான அரசு என்பதை மக்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும். தங்கள் அமைச்சர் மீதே அரசு நடவடிக்கை எடுக்கும் என மக்களுக்கு நம்பிக்கை கொடுங்கள். இது மக்களுக்கான அரசு என்று நிரூபியுங்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர், துணை பிரதமர் ஆக ஏராளமானோர் கனவு காண்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சரும், மம்தா, பினராயி உள்ளிட்ட ஏராளமானோர் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஆகலாம் என்று கனவு காண்கின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை பிரதமர் பதவிக்கு போட்டி போடும் கூட்டம் அதிகமாக உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் 400 எம்பிக்களை வைத்து மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும்.
விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் நாடாளுமன்றக் கூட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஆசிரியரிடம் புகார் அளிப்பது போல் செய்வதை நிறுத்திவிட்டு தொகுதி மக்களுக்கு நல்லது செய்யட்டும். சொந்த தொகுதி மக்களை விட்டுவிட்டு வேறு ஒரு மாநிலத்தில் சென்று அரசியல் செய்வதை முதலில் நிறுத்த வேண்டும். பிரதமருக்கு நிறைய வேலை உள்ளது. அவர் கூறியதை பார்த்தபோது எனக்கு சிரிப்பு வந்தது" என்று கூறினார்.
இதையும் படிங்க: நரிக்குறவர் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்