மதுரை:தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உமையாலிங்கம் என்ற இளைஞர், கோவில் ஒன்று கட்டி அதில் சாமியாராக இருந்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சாமியாரைச் சிலர் காரில் கடத்திச் சென்று, பின்னர் அவரை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் அடிப்படையில் கோவில்பட்டியைச் சேர்ந்த சதீஷ், ரவிக்குமார், மாரியப்பன் மற்றும் செல்வம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர், அவர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இதனிடையே இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 4 பேரும் ஜாமின் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாரிஸ் குமார், “இந்த போலி சாமியார் மீது விருதுநகர் மற்றும் கோவில்பட்டியில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை அரசு வேலை வாங்கித் தருவதாக, பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது” என வாதிட்டார்.
இதனையடுத்து, “போலி சாமியார் கடத்தப்பட்டதாகக் கூறிய வழக்கில், 4 நபர்களும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தினந்தோறும் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கப்படுகிறது” என உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க:துருக்கிக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டு ஜாமின் வழங்கிய நீதிபதி!