மதுரை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு குறிப்பாக மதுரைக்கு பெருமை சேர்த்த தடகள வீராங்கனை ரேவதி வீரமணிக்கு, அவர் கல்வி பயின்ற லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் இன்று (ஆக.12) பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்றுப் பேசிய தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "ஒலிம்பிக் போட்டி என்பது உலக அளவில் விளையாட்டுத் துறையின் உச்சத்தை குறிக்கிறது. அதனடிப்படையில் ஒருவர் அப்போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெறுவது என்பதே அவரை பலருக்கு முன்னுதாரணம் ஆக்குகிறது. ரேவதியின் பங்களிப்பு தமிழ்நாட்டில் உள்ள பல பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது.
ரேவதிக்கு பாராட்டு
என்னைப் போன்ற நல்ல கல்வி, பொருளாதார சூழல், முன்னோர்களின் பின்புலம் வெகு சிலருக்கு தான் அமையும். நான் இன்று இருக்கும் நிலையை அடைவது என்பது பெரிய விஷயம் இல்லை. ஆனால் ரேவதி தனக்கான புதிய பாதையை வகுத்துக் கொண்டவர். மிக சாதாரண பின்புலத்தில் பிறந்து தற்போது அவர் அடைந்திருக்கும் உச்சம் மிகப் பெரியது.