தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழர்கள் வரலாற்றை முன்னோக்கி எடுத்துச் செல்லும் ஆய்வுகள்- மூத்த தொல்லியல் அறிஞர் பேட்டி

மதுரை: தற்போது தமிழ்நாடு முழுவதும் கிடைத்துவரும் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு வரலாற்றை மறுகட்டமைப்பு செய்ய வேண்டியது மிக மிக அவசியம் என்று கூறுகிறார் தமிழ்நாட்டின் மூத்த தொல்லியல் அறிஞர் வெ. வேதாசலம்.

archaeologist vedachalam special interview
archaeologist vedachalam special interview

By

Published : Jul 24, 2020, 5:27 PM IST

Updated : Jul 25, 2020, 3:27 PM IST

ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு தமிழ்நாட்டின் மூத்த தொல்லியல் அறிஞர் வெ. வேதாசலம் சிறப்பு நேர்காணல் வழங்கினார். அதில் அவர் கூறுகையில், "இந்தியாவின் மிக தொன்மை வாய்ந்த நகரங்களில் மதுரையும் ஒன்று.

மதுரை, அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் கி. மு 4,000 ஆண்டுகளிலேயே மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. மதுரையின் அமைவிடமே அதன் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு வரக்கூடிய சாலையை தட்சிணப் பதம் என்பார்கள். அப்பெரும் வழியில்தான் மதுரை அமைந்துள்ளது."

மதுரையின் அன்றையக் கால வாழ்வியல்:

"மதுரையைச் சுற்றி நான்கு திசைகளிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த சமணமலை, முத்துப்பட்டி, கொங்கர், புளியங்குளம், அரிட்டாபட்டி, ஆனைமலை, திருப்பரங்குன்றம் என 13 குன்றுகள் அமைந்துள்ளன. இவை அனைத்திலும் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.

இந்தக் கல்வெட்டுகள் அனைத்தும் மதுரையின் அன்றையக் கால வாழ்வியலை மிக அழகாகச் சொல்கின்றன. மதுரையில் உள்ள இந்தக் கல்வெட்டுகள் மிக தொன்மை வாய்ந்தவை என்பதை இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டு ஆய்வு பிரிவில் இருந்த ஆய்வாளர் ரமேஷ்தான் உலகிற்கு முதன்முதலில் சொன்னவர்.

தொடக்க காலத்தில் இந்தக் கல்வெட்டுகள் தொடர்பாக ஆய்வுசெய்த பலர் சமணம் அல்லது பௌத்த சமயம் சார்ந்துதான் இந்த எழுத்துகள் அனைத்தும் வந்திருக்கக்கூடும் என்று முடிவு செய்தனர். ஆனால் இதற்கு மாறாக தமிழ்நாட்டில் தற்போது கிடைத்துவரும் தொல்லியல் சான்றுகள் அந்த ஆய்வுகளை மறுபரிசீலனை செய்யத் தொடங்குகின்றன."

சங்க காலத்தில் இருந்த நடுகல் மரபு:

"தமிழ்நாட்டின் பழமையான இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்போது அங்கு கிடைக்கும் தமிழ்பிராமி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் அதிகமாகவே கிடைக்கின்றன. மதுரைக்கு அருகிலேயே நடைபெற்றுவரும் கீழடி அகழாய்வில் 100க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

அதேபோன்று மதுரைக்கு மேற்கே புலிமான்கோம்பை, தாதப்பட்டி போன்ற ஊர்களில் கிடைத்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் சமய மரபு சாராத நடுகற்கள் ஆகும். இவை சங்க காலத்தில் நடுகல் மரபு நம்மிடையே இருந்ததை விளக்குகிற தெளிவான சான்றுகளாகும். இதுவரை இந்தியாவில் கிடைத்த நடுகற்களிலேயே மிக மிக தொன்மை வாய்ந்தவை. இவை சமய மரபு சாராத மக்களால் அறியப்பட்ட வழக்காறுகள் ஆகும்.

பேராசிரியர் ராஜன் போன்றவர்கள் கொடுமணல், பொருந்தல் போன்ற பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் கி,மு ஐந்தாம் நூற்றாண்டளவிலேயே இந்த எழுத்துகள் நமக்கு கிடைத்துள்ளன என காலக்கணிப்பு செய்துள்ளனர்."

தமிழர்கள் வரலாற்றை முன்னோக்கி எடுத்துச் செல்லும் ஆய்வுகள்

கடந்த காலத்துக்கு நம்மை கொண்டுச் செல்லும் ஆய்வுகள்:

"கொடுமணலில் கி.மு 430, பொருந்தலில் கி.மு 490 என அங்கு கிடைத்த பொருள்களின் அடிப்படையில் காலக்கணிப்பு செய்யப்பட்டது. அண்மையில் தமிழ்நாடு தொல்லியல் துறையால் நடத்தப்பட்ட அகழாய்வுகளில் கி. மு ஆறாம் நூற்றாண்டு வரை ஆய்வுகள் முன்னோக்கிச் சென்றுள்ளன.

அதேபோன்று ஆதிச்சநல்லூர் அகழாய்வு கி.மு 900 வரை நம்மை கொண்டுசெல்கிறது. இவையெல்லாம் தமிழ்நாடு வரலாற்றில் மாற்றக்கூடிய, பழமையை எடுத்துச் செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ளன. ஒரு காலத்தில் சங்க காலம் என்பது கிறிஸ்துவுக்கு பின்னர் உள்ள மூன்று நூற்றாண்டு காலம் என வரையறை செய்யப்பட்டது. ஆனால் ஆய்வுகளில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் கி. மு இரண்டாம் நூற்றாண்டு எனவும், கி. மு மூன்றாம் நூற்றாண்டு எனவும் தமிழர்களின் சங்க காலத்தை வரையறை செய்தார்கள். தற்போது கிடைத்த தொல்லியல் தரவுகள் மீண்டும் சங்க கால வரையறையை மாற்றம் செய்ய வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது."

சங்ககாலக் கீழடியில் உடன்கட்டை ஏறுதல் பழக்கம்? தொல்லியல் அறிஞர் சிறப்பு நேர்காணல்

கிண்ணிமங்கலத்தில் கண்டறியப்பட்ட தமிழிக் கல்வெட்டு:

"தொல்லியல் துறை சாராத ஆய்வாளர்கள் காந்திராஜன் ஆனந்தன், ராஜவேல் ஆகியோர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ் பிராமி எழுத்தில் புள்ளி வைத்து எழுதப்பட்ட கல்வெட்டில் மெய்யெழுத்துக்கும், 'எ'கர, 'ஒ'கர எழுத்துகளில் புள்ளி இடுவது ஒரு மரபாக இருந்திருக்கிறது. இந்த மரபின் தொடக்க காலத்தில் கிடைத்த கல்வெட்டு என இதனை கருதலாம்.

கி.மு இரண்டாம் நூற்றாண்டிலிருந்து கி.பி ஒன்றாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில்தான் தமிழ் பிராமி எழுத்துகளில் புள்ளி வைக்கும் முறை உருவாகியிருக்க வேண்டும். நமக்கு இதுவரை கிடைத்த கல்வெட்டுகளில் மிகப் பழமையான புள்ளி வைத்த எழுத்து மதுரை அருகே யானை மலையில் உள்ள 'அரட்ட காயபன்' என்ற சொல்தான். ஆனால் இந்த கல்வெட்டு குறித்த விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தனி மனிதனுடைய பெயரும் கோட்டம் என்ற சொல்லும் காணப்படுவது இக்கல்வெட்டின் மற்றொரு தனிச் சிறப்பாகும்.

'தமிழி' எழுத்து வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை; 'மா' மதுரையில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொக்கிஷம்!

'எ' என்ற எழுத்தில் புள்ளி இருக்கின்ற காரணத்தால் இதனை 'எகன் ஆதன் கோட்டம்' என்று படிக்கலாம். இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்ட கல்தூண் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இதுவரை வரலாற்றில் கல்தூணில் பொறிக்கப்பட்ட 'தமிழ் பிராமி' எழுத்துகள் கிடைத்ததில்லை.

இதுவே முதல் முறையாகும். இதில் வருகின்ற 'கோட்டம்' என்ற சொல் 'வழிபாட்டு இடம்' என்று பொருள் கொள்ள ஏதுவாக உள்ளது.

இந்தக் 'கோட்டம்' என்ற சொல் சங்க இலக்கியங்களில் முதல் முதலாக புறநானூற்றில்தான் வருகிறது. 299ஆம் பாடலில் 'அணங்கு முருகன் கோட்டத்து' என அமைந்துள்ளது. அதற்குப் பிறகு கலித்தொகையிலும், சிலப்பதிகாரத்திலும் 'கோட்டம்' என்ற சொல் காணப்படுகிறது. குறிப்பாக சிலப்பதிகாரம் வழிபாட்டுத் தலத்தை நகர், நியமம், கோயில், கோட்டம் என நான்கு வெவ்வேறு சொற்களால் குறிப்பிடுகிறது

கிண்ணிமங்கலம் கல்வெட்டின் மூலமாக பெரு மரபுகள் சாராத வழிபாடுக் கூடமாக இது இருந்திருக்க வேண்டும் என உணரமுடிகிறது. குறிப்பிட்ட சொல்லை பொருத்தவரை இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம் 'ஏகன் ஆதனுடைய கோட்டம்' என்றும் 'ஏகன் ஆதன் எடுப்பித்த கோட்டம்' எனவும் பொருள்கொள்ளலாம்.

அந்த வகையில் இந்த குறிப்பிட்ட கல்வெட்டு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. தற்போது தமிழ்நாட்டு அளவில் நிறைய கல்வெட்டுகள் கிடைத்து வருகின்றன. இவற்றையெல்லாம் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தி நமது வரலாற்றை முன்னோக்கி கொண்டுசெல்வது அவசியமாகும்" என்றார்.

இதையும் படிங்க...'தமிழி' எழுத்து வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை; 'மா' மதுரையில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொக்கிஷம்!

Last Updated : Jul 25, 2020, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details